புதிய, வளர்ச்சியடைந்த, லட்சியமிக்க இந்தியா: என்.டி.ஏ.வுக்கு பிரதமர் மோடி புதிய விளக்கம்

"தமிழ்நாட்டில் ஒரு இடத்தில்கூட நம்மால் வெற்றி பெற முடியாமல் போகலாம். ஆனால்.."
புதிய, வளர்ச்சியடைந்த, லட்சியமிக்க இந்தியா: என்.டி.ஏ.வுக்கு பிரதமர் மோடி புதிய விளக்கம்
படம்: https://x.com/BJP4India

என்.டி.ஏ.வுக்கு புதிய, வளர்ச்சியடைந்த, லட்சியமிக்க இந்தியா என பிரதமர் மோடி புதிய விளக்கத்தைக் கொடுத்துள்ளார்.

பழைய நாடாளுமன்ற வளாகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நாடாளுமன்றக் குழுத் தலைவராக ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார். இதன்மூலம், 60 ஆண்டுகளுக்குப் பிறகு தொடர்ந்து மூன்றாவது முறையாக நாட்டின் பிரதமராக மோடி பதவியேற்கவுள்ளார்.

தேிய ஜனநாயகக் கூட்டணித் தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட பிறகு பிரதமர் மோடி உரையாற்றியதாவது:

"தேசிய ஜனநாயகக் கூட்டணி 10 ஆண்டுகளுக்கும் மேல் ஆட்சியில் உள்ளது. இது சாதாரண விஷயம் அல்ல. இதுதான் மிகவும் வெற்றிகரமான கூட்டணி.

அதிகாரத்தைக் கைப்பற்றி, ஆட்சியைப் பிடிப்பதற்காக சில கட்சிகளால் தேசிய ஜனநாயகக் கூட்டணி உருவாகவில்லை. நாட்டுக்கு முன்னுரிமை என்ற உணர்வில் உறுதிகொண்டுள்ள குழுதான் தேசிய ஜனநாயகக் கூட்டணி.

தென்னிந்தியாவில் புதிய அரசியலுக்கான அடித்தளத்தை தேசிய ஜனநாயகக் கூட்டணி வலுப்படுத்தியுள்ளது. கர்நாடகத்திலும், தெலங்கானாவிலும் அண்மையில்தான் மாநில அரசுகள் அமைந்தன. ஆனால், சில நாள்களிலேயே மக்களின் நம்பிக்கை உடைந்துள்ளது. மாயையிலிருந்து வெளிவந்துள்ள மக்கள் கர்நாடகத்திலும், தெலங்கானாவிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணியை ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.

தமிழ்நாட்டில் பணியாற்றியவர்களைப் பாராட்டுகிறேன். தமிழ்நாட்டில் ஒரு இடத்தில்கூட நம்மால் வெற்றி பெற முடியாமல் போகலாம். ஆனால், அங்கு தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வாக்கு வங்கி பெரிதளவில் வேகமெடுத்துள்ளது. இது தெளிவான செய்தியை உணர்த்துகிறது. கேரளத்தில் நூற்றுக்கணக்கான நம் தொண்டர்கள் தியாகம் செய்துள்ளார்கள். முதன்முறையாக கேரளத்திலிருந்து நமக்குப் பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளது" என்றார் பிரதமர் மோடி.

இந்தக் கூட்டத்தில் புதிய, வளர்ச்சியடைந்த, லட்சியமிக்க இந்தியா என என்.டி.ஏ.வுக்கு புதிய விளக்கத்தையும் பிரதமர் மோடி கூறினார்.

இந்தக் கூட்டத்தில் தமிழ்நாட்டிலிருந்து ஓ. பன்னீர்செல்வம், ஜி.கே. வாசன், டிடிவி தினகரன், ஏ.சி. சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றார்கள்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in