புதிய குற்றவியல் சட்டங்கள் ஜூலை 1 முதல் அமல்: மத்திய அமைச்சர்

அனைத்து மாநிலங்களிலும், புதிய சட்டங்கள் குறித்து பயிற்சியளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்ANI

புதிய குற்றவியல் சட்டங்கள் ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வரும் என மத்திய சட்டத் துறை இணை அமைச்சர் அர்ஜுன் மேக்வால் அறிவித்துள்ளார்.

காலனிய ஆட்சிக் கால குற்றவியல் சட்டங்களுக்கு மாற்றாக பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்‌ஷா சன்ஹிதா, பாரதிய சாக்‌ஷிய அதீனியம் ஆகிய சட்டங்கள் பாஜகவின் முந்தைய ஆட்சியில் கடந்த குளிர்காலக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டன.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு டிசம்பர் 25-ல் இந்தச் சட்டங்களுக்கு ஒப்புதல் அளித்தார். இந்திய தண்டனைச் சட்டம் 1860, குற்றவியல் நடைமுறைச் சட்டம் 1973 மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் 1872 ஆகியவற்றுக்கு மாற்றாக இந்தச் சட்டங்கள் அமையவுள்ளன.

இந்தச் சட்டங்கள் வரும் ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வரும் என மத்திய இணை அமைச்சர் அர்ஜுன் மேக்வால் இன்று தெரிவித்துள்ளார். அனைத்து மாநிலங்களிலும், புதிய சட்டங்கள் குறித்து பயிற்சியளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பாரதிய நியாய சன்ஹிதாவில் 9 புதிய குற்றங்கள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன. 33 குற்றங்களுக்கு சிறைத் தண்டனைக் காலம் அதிகரிக்கப்பட்டுள்ளன. 23 குற்றங்களுக்குக் குறைந்தபட்ச தண்டனை கட்டாயம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளன. 83 குற்றங்களுக்கு அபராதங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. பாரதிய நாகரிக் சுரக்‌ஷா சன்ஹிதாவில் 531 பிரிவுகள் உள்ளன. இதுவே குற்றவியல் நடைமுறைச் சட்டம் 1898-ல் 484 பிரிவுகள் மட்டுமே இருந்தன.

புதிய குற்றவியல் சட்டங்கள் ஜூலை 1 முதல் அமலுக்கு வரவுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்கெனவே கடந்த பிப்ரவரியில் அறிவித்தது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in