ஏர் இந்தியா விமானிகளின் உரையாடல்: சர்ச்சையை கிளப்பிய அமெரிக்க ஊடகத்தின் செய்தி | Air India

விமான விபத்து புலனாய்வுப் பணியகம் (AIIB) வெளியிட்ட முதற்கட்ட அறிக்கை, வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தியில் மேற்கோள்காட்டப்பட்டுள்ளது.
விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம்
விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம்ANI
1 min read

குஜராத்தின் அஹமதாபாத்தில் கடந்த மாதம் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் இருந்த இரண்டு விமானிகளுக்கு இடையேயான கடைசி உரையாடலின் கருப்புப் பெட்டி பதிவு, விமானத்தின் எஞ்சினுக்கான எரிபொருள் துண்டிக்கப்பட்டதைக் குறிக்கிறது என்று அமெரிக்க ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

போயிங் 787 ட்ரீம்லைனர் விமானத்தை இயக்கிய முதல் அதிகாரி (2-ம் நிலை விமானி), விமானம் ஓடுபாதையில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, எரிபொருள் சுவிட்சுகள் எதனால் அணைக்கப்பட்டன என்று அனுபவம் வாய்ந்த மூத்த விமானியின் கேள்வி எழுப்பியதாக ஸ்ட்ரீட் ஜர்னலில் வெளியான செய்தியில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதைத் தொடர்ந்து முதல் அதிகாரி பீதியை வெளிப்படுத்தினார் என்றும், அந்த நேரத்தில் மூத்த விமானி அமைதியாக இருந்தார் என்றும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

விபத்திற்குள்ளான ஏர் இந்தியா விமானத்தை இயக்கிய இரு விமானிகளான கேப்டன் சுமீத் சபர்வால் மற்றும் முதல் அதிகாரி கிளைவ் குந்தர், முறையே 15,638 மணிநேரம் மற்றும் 3,403 மணிநேரம் பறக்கும் அனுபவம் பெற்றவர்கள். விபத்தில் கொல்லப்பட்ட விமானத்திற்குள் இருந்த 241 பேரில் இவர்கள் இருவரும் அடக்கம். இந்த விபத்தில் ஒரு பயணி மட்டுமே உயிர் தப்பினார்.

ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்ட பிறகு விமான விபத்து புலனாய்வுப் பணியகம் (AIIB) வெளியிட்ட முதற்கட்ட அறிக்கை, வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தியில் மேற்கோள்காட்டப்பட்டுள்ளது.

விமானம் ஓடுதளத்தில் இருந்து மேலெழும்பியதும் 1 வினாடி இடைவெளியில் இரண்டு என்ஜின்களுக்கான எரிபொருள் சுவிட்சுகள் ஒன்றன் பின் ஒன்றாக அணைக்கப்பட்டதாக வால் ஸ்ட்ரீட் செய்தியில் கூறப்பட்டுள்ளது. விமானத்தின் புறப்பாடு மற்றும் விபத்துக்கும் இடையிலான நேரம் வெறும் 32 வினாடிகள் மட்டுமே என்றும் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முதற்கட்ட விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ள விவரங்கள், எரிபொருள் சுவிட்சுகளை அணைத்தவர் கேப்டன்தான் என்று கூறுவதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இந்திய விமானிகள் கூட்டமைப்பின் (FIP) தலைவர் சி.எஸ். ரந்தாவா, வால் ஸ்ட்ரீட் ஜர்னலின் `ஆதாரமற்ற செய்தியை’ கடுமையாக சாடியதோடு, இதற்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.

முதற்கட்ட விசாரணை அறிக்கையில், எரிபொருள் ஓட்டத்தை கட்டுப்படுத்தும் சுவிட்சுகளை விமானிகள் அணைத்தது குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை என்பதை அடிக்கோடிட்ட ரந்தாவா, இறுதி அறிக்கை வெளிவருவதற்கு முன்பு உரிய ஆதாரமில்லாமல், மக்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்கக்கூடாது என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in