NET தேர்வு ரத்து: மத்திய கல்வி அமைச்சகம் அறிவிப்பு!

மீண்டும் NET தேர்வு நடத்தப்படும். இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்திட சி.பி.ஐ அமைப்பிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
NET தேர்வு ரத்து: மத்திய கல்வி அமைச்சகம் அறிவிப்பு!
ANI
1 min read

ஜூன் 19-ல் நாடு முழுவதும் நடத்தப்பட்ட NET ரத்து செய்யப்படுவதாக மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. NET தேர்வில் முறைகேடு நடந்திருக்கலாம் என மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் `இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம்’ அளித்துள்ள தகவலை அடுத்து மத்திய கல்வி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

`மீண்டும் புதிதாக NET தேர்வு நடத்தப்படும், அதற்கான அறிவிப்பு தனியாக வெளியிடப்படும். இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்திட சி.பி.ஐ-யிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது’ என மத்திய கல்வி அமைச்சகத்தின் எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

UGC-ன் NET தேர்வை `தேசிய தேர்வு முகமை’ நடத்தியது. மருத்துவ இளநிலை படிப்புக்கான NEET தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்தி அதன் முடிவுகள் சர்ச்சையான நிலையில், தேசிய தேர்வு முகமை நடத்திய மற்றொரு தேர்வான NET ரத்து செய்யப்பட்டது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

இளநிலை ஆராய்ச்சி உதவித்தொகை மற்றும் உதவிப் பேராசிரியர், பி.எச்.டி சேர்க்கை ஆகியவற்றுக்காக மாணவர்களைத் தேர்வு செய்ய UGC-ன் NET தகுதித்தேர்வு வருடத்துக்கு இரண்டு முறை நடத்தப்பட்டு வருகிறது.

`அடுத்தடுத்த சர்ச்சை விவகாரங்களால், மத்திய கல்வி அமைச்சர் மற்றும் UGC அமைப்பின் தலைவர் ராஜினாமா செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையைக் கலைக்க வேண்டும், NEET தேர்வை முற்றிலுமாக நீக்க வேண்டும்' என்ற கோரிக்கைகளை முன்வைத்து டெல்லியில் இருக்கும் மத்திய கல்வி அமைச்சகத்துக்கு முன்பு போராடப்போவதாக டெல்லி ஜ.என்.யூ பல்கலைக்கழக மாணவர்கள் அறிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in