அமைச்சரவைப் பட்டியல் எப்போது தயாராகும்?: பிரதமர் மோடி தகவல்

பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, நேபாளப் பிரதமர் புஷ்ப கமல் தஹல், இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளார்கள்.
அமைச்சரவைப் பட்டியல் எப்போது தயாராகும்?: பிரதமர் மோடி தகவல்

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் அமைச்சரவையின் முழுப் பட்டியலைச் சமர்ப்பிக்கவுள்ளது குறித்து பிரதமர் மோடி விளக்கமளித்துள்ளார்.

பிரதமர் மோடியை ஆட்சியமைக்குமாறு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அழைப்பு விடுத்துள்ளார். இதன்படி, பிரதமர் மோடி ஜூன் 9-ல் மீண்டும் பிரதமராகப் பதவியேற்கிறார்.

"குடியரசுத் தலைவர் என்னை அழைத்து பிரதமராகச் செயல்படுமாறு கேட்டுக்கொண்டார். பதவியேற்பு விழா குறித்தும் அவர் என்னிடம் பேசினார். ஜூன் 9 அன்று மாலை பதவியேற்பது எங்களுக்கு வசதியாக இருக்கும் என்று குடியரசுத் தலைவரிடம் தெரிவித்தேன். குடியரசுத் தலைவர் மாளிகை பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகளைச் செய்யவுள்ளது. அதற்குள் அமைச்சரவையின் முழுப் பட்டியலை குடியரசுத் தலைவரிடம் நாங்கள் சமர்ப்பிப்போம். இதன்பிறகு, பதவியேற்பு விழா நடைபெறும்.

மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி நல்லாட்சியை வழங்க உறுதிகொண்டுள்ளது. சாதாரண மக்களின் கனவுகளைப் பூர்த்தி செய்வதற்கான முயற்சிகள் தொடரும்.

கடந்த 10 ஆண்டுகளில் உலக நாடுகளின் தோழமையாக இந்தியா உருவெடுத்துள்ளது. இதன் உச்சபட்ச பலன் இனிதான் தொடங்கவுள்ளது. உலகளாவிய சூழலில் அடுத்த 5 ஆண்டுகள் இந்தியாவுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையவிருக்கிறது. நிறைய பிரச்னைகள், பதற்றங்கள், பேரழிவுகளை இந்த உலகம் எதிர்கொண்டு வருகிறது. இந்தியர்களாகிய நாம் இத்தனை இடர்களுக்கு மத்தியிலும் உலகில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக அறியப்படுகிறோம். உலக நாடுகளால் நாம் பாராட்டப்படுகிறோம்" என்றார் பிரதமர் மோடி.

தில்லியில் ஜூன் 9 அன்று நடைபெறவுள்ள பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, நேபாளப் பிரதமர் புஷ்ப கமல் தஹல், இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளார்கள்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in