
நீட் தேர்வு மையத்தில் ஏற்பட்ட மின் வெட்டால், தேர்வை சரிவர எழுத முடியவில்லை என்று மாணவி ஒருவர் வழக்கு தொடர்ந்ததை அடுத்து, நீட் தேர்வு முடிவை வெளியிட மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தின் இந்தூர் அமர்வு தற்காலிகத் தடை விதித்துள்ளது.
இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே 4-ல் நாடு முழுவதும் நடைபெற்றது. தேர்வு நேரத்தின்போது, மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரத்தின் பல்வேறு இடங்களில் மோசமான வானிலை காரணமாக மின்வெட்டு ஏற்பட்டுள்ளது.
இதனால், சில தேர்வு மையங்களில் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் மாணவர்கள் தேர்வை எழுதியதாக உயர் நீதிமன்ற அமர்வில் நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் குற்றம்சாட்டியுள்ளார்.
நேற்று (மே 16) இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுபோத் அபயங்கர், தேர்வுச் சூழலில் சமரசம் ஏற்பட்டுள்ளதாகவும், முறையான ஏற்பாடுகளை மேற்கொள்ள அதிகாரிகள் தவறிவிட்டதாகவும், விசாரணையின்போது குறிப்பிட்டார்.
`அடுத்தகட்ட விசாரணை நடைபெறும் தேதி வரையில், நீட் தேர்வு முடிவை தேசிய தேர்வு முகமை வெளியிடக்கூடாது என உத்தரவிடப்படுகிறது’ என்று உயர் நீதிமன்றத்தின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. மேலும், முன்னதாகவே அறிவுரைகள் அனுப்பியும், விசாரணையின்போது ஆஜராகாததற்காக சம்மந்தப்பட்ட அதிகாரிகளை நீதிபதி கண்டித்தார்.
தேசிய தேர்வு முகமை, மத்திய அரசு மற்றும் மத்திய பிரதேச மேற்கு மண்டல மின்சார விநியோக நிறுவனம் ஆகியவை நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு நீதிமன்றத்தால் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மனு மீதான அடுத்த விசாரணை ஜூன் 30-ல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வு முடிவு தோராயமாக ஜுன் 14 அன்று வெளியாக இருந்தது. உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் தேர்வு முடிவு தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.