
ஆகஸ்ட் 14 முதல் நீட் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வுகள் தொடங்கும் என்று மருத்துவக் கலந்தாய்வுக் குழு அறிவித்துள்ளது. இதற்கான பதிவு நடைமுறைகள் ஆகஸ்ட் முதல் வாரத்தில் தொடங்கும் என்றும் அறிவிப்பு.
கலந்தாய்வுகள் தொடர்பான தகவல்கள் மருத்துவக் கலந்தாய்வுக் குழுவின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இந்தியா முழுவதும் இருக்கும் 710 மருத்துவக் கல்லூரிகளில் உள்ள சுமார் 1.10 லட்சம் எம்.பி.பி.எஸ் இடங்களுக்கு கலந்தாய்வு நடைபெற உள்ளது. இத்துடன் சேர்த்து சுமார் 21,000 பிடிஎஸ் படிப்புக்கும் கலந்தாய்வு நடைபெற உள்ளது.
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி கடந்த ஜூலை 26-ல் திருத்தப்பட்ட இளநிலை நீட் தேர்வு முடிவுகளை வெளியிட்டது தேசிய தேர்வு முகமை. இந்த முடிவுகளின் அடிப்படையில் கலந்தாய்வு நடைபெற உள்ளது.
நாடு முழுவதும் 571 நகரங்களில் உள்ள 4,750 மையங்களில் கடந்த மே 5-ல் இளநிலை நீட் தேர்வு நடைபெற்றது. இதன் முடிவு ஜூன் 4-ல் வெளியானது. தேர்வுக்கு முன் நடைபெற்ற வினாத்தாள் கசிவு, 1563 மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண் விவகாரங்கள் சர்ச்சையை ஏற்படுத்தின.
இதை அடுத்து நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்து, மறு தேர்வு நடத்த உத்தரவிடுமாறு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்பட்டது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு, மறுதேர்வு நடத்த முடியாது என்று தீர்ப்பளித்தனர்.
நீட் தேர்வில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கான விடையில் குளறுபடி ஏற்பட்டது. இதை அடுத்து அந்த கேள்விக்கான சரியான விடையை தில்லி ஐஐடி வழங்கியது. அதன் அடிப்படையில் நீட் தேர்வு முடிவில் திருத்தம் மேற்கொள்ள உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம்.
ஜூன் 4-ல் வெளியான நீட் தேர்வு முடிவில் சுமார் 13,16,268 பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். ஆனால் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி கடந்த ஜூலை 26-ல் வெளியான வெளியான நீட் தேர்வு முடிவில் 13,15,853 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.