

பிஹார் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளது.
பிஹார் மாநில சட்டமன்ற தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. முதற்கட்டமாக 121 தொகுதிகளுக்கு வரும் நவம்பர் 6 அன்று வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்), ராஷ்ட்ரீய லோக் மோர்ச்சா மற்றும் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா ஆகிய கட்சிகள் இணைந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியில் களம் காண்கின்றன.
வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாள்களே உள்ள நிலையில் தேர்தல் பரப்புரையில் கட்சிகள் மும்முரம் காட்டி வருகின்றன. இதற்கிடையில் கடந்த அக்டோபர் 28 அன்று ஆர்ஜேடி - காங்கிரஸ் கூட்டணி தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டன. அதைத் தொடர்ந்து தேசிய ஜனநாயகக் கூட்டணி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
பிஹார் தலைநகர் பாட்னாவில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா, பிஹார் முதல்வர் நிதிஷ் குமார், லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் சிராக் பாஸ்வான் மற்றும் ஆர்.எல்.எம். தலைவர் உபேந்திர குஷ்வாஹா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் முன்னிலையில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.
தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்
அரசு மற்றும் தனியார் துறைகளில் 1 கோடி பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
“லட்சாதிபதி தீதி” திட்டத்தின் கீழ் ஒரு கோடி பெண்களுக்கு நிதி உதவி அளிப்பதுடன், பெண்களுக்கு ரூ. 2 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படும்.
பிஹாரில் 7 அதிவிரைவுச் சாலைகள் கட்டப்படும். 3,600 கி.மீட்டர் ரயில் பாதைகள் மேம்படுத்தப்படும்.
பாட்னா, தர்பங்கா, பூர்னியா, பாகல்பூர் விமான நிலையங்களை சர்வதேசத் தரத்திற்கு உயர்த்தப்படும்.
நான்கு நகரங்களில் மெட்ரோ ரயில் சேவைகள் தொடங்கப்படும்.
10 புதிய நகரங்களுக்கு உள்நாட்டு விமானச் சேவை விரிவுபடுத்தப்படும்.
மாவட்டத்திற்கு 10 புதிய தொழில் பூங்காக்கள் மற்றும் மாநிலம் முழுவதும் 100 சிறு, குறு, நடுத்தர நிறுவனப் பூங்காக்கள் உருவாக்கப்படும்.
விவசாய பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதாரா விலை உறுதியாக வழங்கப்படும்.
விவசாயிகளுக்கான கிசான் சம்மான் நிதி ஆண்டுக்கு ரூ. 6,000 லிருந்து ரூ. 9,000 ஆக உயர்த்தப்படும்.
மீனவர்களுக்கான உதவித் தொகை ரூ. 4,500-ல் இருந்து ரூ. 9,000 ஆக உயர்த்தப்படும்.
‘கபூர்கரி தாக்கூர் கிசான் சம்மான் நிதி’ திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 3,000 வழங்கப்படும்.
பிஹார் பள்ளிகளில் மதிய உணவுடன் காலை உணவும் வழங்கப்படும்.
ஏழை குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்குத் தொடக்கக் கல்வி முதல் முதுகலைப் படிப்பு வரை இலவச கல்வி வழங்கப்படும்.
உயர்கல்வி பயிலும் அட்டவணைப் பிரிவு மாணவர்களுக்கு ரூ. 2,000 மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படும்.
ஏழை எளிய மக்களுக்கு இலவச ரேஷன், 125 யூனிட் வரை இலவச மின்சாரம், ரூ. 5 லட்சம் வரை இலவச மருத்துவ சிகிச்சை வழங்கப்படும்.
50 லட்சம் புதிய கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும்.
The National Democratic Alliance (NDA) is out with its manifesto, less than a week before the Phase 1 voting for the Bihar assembly elections 2025.
