
பிரதமர் நரேந்திர மோடியும், பாஜக தலைவர் ஜே.பி. நட்டாவும் இணைந்து வரவிருக்கும் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலுக்கான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளரை இறுதி செய்வார்கள் என்றும், ஆகஸ்ட் 12-ல் வேட்பாளரின் பெயர் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது என்றும், மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் கிரண் ரிஜிஜு இன்று (ஆக. 7) தகவல் தெரிவித்தார்.
நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்.டி.ஏ.) தலைவர்களின் முக்கியமான ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் இதை தெரிவித்துள்ளார்.
நடப்பு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளில் குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் மருத்தவக் காரணங்களுக்காக தனது பதவியை ராஜினாமா செய்து, அதன்பிறகு காலியிடத்தை நிரப்ப தேர்தல் ஆணையம் அறிவிக்கை வெளியிட்ட சில நாட்களுக்குப் பிறகு இந்தக் கூட்டம் நடைபெற்றுள்ளது.
பாஜக தலைவர் ஜே.பி. நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், சிவசேனா தலைவர்கள் ஸ்ரீகாந்த் ஷிண்டே, மிலிந்த் தியோரா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் பிரஃபுல் படேல், சிராக் பாஸ்வான், உபேந்திர குஷ்வாஹா, ராம் மோகன் நாயுடு, லல்லான் சிங், அப்னா தளம் (எஸ்) தலைவர் அனுப்ரியா படேல், ராம்தாஸ் அத்வாலே உள்ளிட்ட பாஜக கூட்டணிக் கட்சிகளின் மூத்த தலைவர்கள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளரை இறுதி செய்வதைத் தவிர, தேர்தல் ஒருங்கிணைப்பு மற்றும் வாக்குப்பதிவு பயிற்சி குறித்தும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது.
புதிய குடியரசுத் துணைத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் ரகசிய வாக்கெடுப்பு மூலம் நடத்தப்படுவதால், கட்சி கொறடாக்களை வைத்து எம்.பி.க்களை கட்டுப்படுத்தும் முறை இதில் செயல்படாது என்பதையும், செல்லாத வாக்குகளைத் தடுத்து வாக்களிக்கும் செயல்முறையை கூட்டணிக் கட்சிகளின் அனைத்து எம்.பி.க்களும் நன்கு அறிந்திருப்பதை உறுதிசெய்யவும் இந்த கூட்டம் நடைபெற்றுள்ளது.