200+ தொகுதிகள்: தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மகத்தான வெற்றி! | Bihar Election | NDA |

பாஜக 92 இடங்களில் முன்னிலை வகிப்பதன் மூலம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கிறது. நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 83 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.
NDA crossing 200+ seats in Bihar Assembly Elections
நிதிஷ் குமார், பிரதமர் நரேந்திர மோடி (கோப்புப்படம்)ANI
2 min read

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் நிதிஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 200-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.

243 சட்டப்பேரவைத் தொகுதிகள் கொண்ட பிஹாரில் நவம்பர் 6 மற்றும் நவம்பர் 11 ஆகிய நாள்களில் இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இரு கட்டங்களிலும் ஒட்டுமொத்தமாக 66.91% சதவீத வாக்குகள் பதிவாகின. பிஹார் வரலாற்றிலேயே இந்தளவுக்கு வாக்குகள் பதிவானது கிடையாது.

முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், பாஜக, சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்) உள்ளிட்ட கட்சிகள் தேசிய ஜனநாயகக் கூட்டணியாகப் போட்டியிட்டன. தேஜஸ்வி யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் மெகா கூட்டணியாகப் போட்டியிட்டன. பிரஷாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி தனித்துக் களம் கண்டது. தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

9 மணி நேரமாக நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 203 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. பாஜக 92 இடங்களில் முன்னிலை வகிப்பதன் மூலம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கிறது. நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 83 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. சிராக் பாஸ்வானின் லோக் ஜனஷக்தி (ராம்விலாஸ்) 19 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.

மெகா கூட்டணியில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் 26 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. கடந்த தேர்தலில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் தான் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. காங்கிரஸ் வெறும் 5 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகித்து மிகப் பெரிய பின்னடைவைச் சந்தித்துள்ளது. 40 தொகுதிகளைக் கைப்பற்றுவதே மெகா கூட்டணிக்குத் தற்போது சவாலாக உள்ளது.

மாற்றாக உருவெடுக்கிறேன் என தேர்தலில் புதிதாகக் களம் கண்ட பிரஷாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி ஓர் இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் இந்த மகத்தான வெற்றியைத் தொடர்ந்து, பிஹாரின் வளர்ச்சியை நோக்கி தொடர்ச்சியாகச் செயல்படுவோம் என பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா உள்ளிட்டோர் தில்லியிலுள்ள பாஜக தலைமையகம் வந்தடைந்துள்ளார்கள். பிரதமர் நரேந்திர மோடியும் வரவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பிஹார் முதல்வர் பதவியில் தொடரவுள்ளார் நிதிஷ் குமார். பதவியேற்பு விழா குறித்த அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் எனத் தெரிகிறது.

Bihar Elections | Nitish Kumar | NDA | BJP | JDU | Tejashwi Yadav | RJD | INDIA Alliance | Mahagatbandhan | Congress | Chirag Paswan | Lok Janashakthi (Ram Vilas) | Jan Suraaj Party | Prashant Kishor | Bihar | Bihar Election | Bihar Election 2025 | Bihar Elections | Bihar Elections 2025 |

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in