மாநிலங்களவையில் பாஜகவின் பலம் குறைகிறதா?

பிஜூ ஜனதா தளத்துக்கு 9 எம்.பி.க்கள் மாநிலங்களவையில் உள்ளனர். ஆனால் தேர்தல் தோல்விக்குப் பிறகு இனி பாஜகவுக்கு ஆதரவு இல்லை என்று அக்கட்சி அறிவித்துள்ளது
மாநிலங்களவையில் பாஜகவின் பலம் குறைகிறதா?
ANI
1 min read

மாநிலங்களவையின் 4 நியமன எம்.பி.க்கள் கடந்த சனிக்கிழமை ஒய்வு பெற்றனர். மேலும் மாநிலங்களவையில் பாஜகவின் பலம் 86 ஆகவும், தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளின் உறுப்பினர்களின் பலம் 101 ஆகவும் உள்ளது.

இந்திய மாநிலங்களவையின் மொத்த பலம் 245. இதில் 233 எம்.பி.க்கள் மாநில சட்டப்பேரவை எம்.எல்.ஏ.க்களால் மறைமுகமாகத் தேர்தெடுக்கப்படுவார்கள். மீதமுள்ள 12 எம்.பி.க்கள் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுவார்கள்.

மாநிலங்களவையில் தற்போது 19 இடங்கள் காலியாக இருக்கிறது. முறையே, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 4 இடங்களும், பிற 8 மாநிலங்களிலிருந்து 11 இடங்களும், 4 நியமன இடங்களும் காலியாக இருக்கிறது. இந்த 19 காலி இடங்களால், மாநிலங்களவையின் பலம் 226 ஆக உள்ளது.

இதனால் மாநிலங்களவையில் சட்ட மசோதாக்களை நிறைவேற்ற ஆளும் பாஜகவுக்கு 114 எம்.பி.க்களின் ஆதரவு தேவை. தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளின் பலம் தற்போது 101 ஆக உள்ளது. கடந்த 10 வருடங்களாக பாஜகவுக்கு மாநிலங்களவையில் ஆதரவாக இருந்த பிஜூ ஜனதா தளத்துக்கு தற்போது 9 எம்.பி.க்கள் மாநிலங்களவையில் உள்ளனர்.

ஆனால் இனி பாஜகவுக்கு ஆதரவளிக்கப்போவதில்லை என்று ஒடிஷா தேர்தல் தோல்விக்குப் பிறகு பிஜூ ஜனதா தளம் அறிவித்துள்ளது. இதை ஈடுகட்ட ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸின் 11 எம்.பி.க்கள், 7 நியமன எம்.பி.க்கள் ஆகியோரின் ஆதரவுடன் சட்ட மசோதாக்களை நிறைவேற்ற பாஜகவால் முடியும்.

அஸ்ஸாம், மத்திய பிரதேசம், திரிபுரா, ராஜஸ்தான், ஹரியானா, பீஹார், மராட்டியம் போன்ற 7 மாநிலங்களில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனால் இந்த மாநிலங்களில் காலியாக உள்ள 10 மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல் நடக்கும்பட்சத்தில், அதில் ஏறத்தாழ 8 இடங்களை பாஜக கைப்பற்றும் வாய்ப்பு உள்ளது. மேலும் 4 நியமன இடங்களுக்கான எம்.பி.க்களை குடியரசுத் தலைவர் நியமிக்கும் பட்சத்தில் பாஜகவுக்கான ஆதரவு மேலும் உயரும்.

மாநிலங்களவையில் உள்ள 12 நியமன இடங்களுக்கு மத்திய அரசு பரிந்துரைக்கும் நபர்களை நியமிப்பார் குடியரசுத் தலைவர். எனவே பெரும்பாலும் நியமன எம்.பி.க்கள் மாநிலங்களவையில் மத்திய அரசுக்கு ஆதரவாக இருப்பார்கள். நியமன எம்.பி.க்கள் தாங்கள் மாநிலங்களவைக்கு நியமிக்கப்பட்ட 6 மாதங்களில் எந்த கட்சி சார்பு எம்.பி.யாகவும் தங்களை அறிவித்துக்கொள்ளலாம். அப்படித்தான் தற்போது நியமன எம்.பி.யாக உள்ள குலாம் அலி தன்னை பாஜக உறுப்பினராக அறிவித்துக்கொண்டார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in