
மஹாராஷ்டிர துணை முதல்வரும், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவருமான அஜித் பவாருக்கு அரசியல்ரீதியிலான பின்னடைவை ஏற்படுத்தும் வகையில், நாகாலாந்தில் உள்ள அக்கட்சியைச் சேர்ந்த 7 எம்.எல்.ஏ.க்களும் ஒட்டுமொத்தமாக ஆளும் தேசிய ஜனநாயக முற்போக்கு கட்சியில் இணைந்துள்ளனர்.
நாகாலாந்தில் தற்போது தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. 60 இடங்களைக் கொண்ட நாகாலாந்து சட்டப்பேரவைக்கு கடந்த 2023-ல் நடைபெற்ற தேர்தலில், கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட தேசிய ஜனநாயக முற்போக்கு கட்சிக்கு 25 இடங்களும், பாஜகவிற்கு 12 இடங்களும் கிடைத்தன.
தனித்துப் போட்டியிட்ட தேசியவாத காங்கிரஸுக்கு 7 இடங்களும், தேசிய மக்கள் கட்சிக்கு 5 இடங்களும் கிடைத்தன. காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. இதைத் தொடர்ந்து, பாஜக ஆதரவுடன் தேசிய ஜனநாயக முற்போக்கு கட்சியின் நிறுவனர் நைஃபியு ரியோ முதல்வரானார்.
இந்நிலையில், இரு ஆண்டுகள் கழித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 7 எம்.எல்.ஏ.க்களும், தேசிய ஜனநாயக முற்போக்கு கட்சியில் தற்போது இணைந்துள்ளனர். இதனால், தேசிய ஜனநாயக முற்போக்கு கட்சி எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்து, அதன் மூலம் அக்கட்சிக்கு சட்டப்பேரவையில் தனிப்பெரும்பான்மை கிடைத்துள்ளது.
7 எம்.எல்.ஏ.க்களும் ஒட்டுமொத்தமாக கட்சி மாறியுள்ளதால், அவர்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்க நடவடிக்கை பாய்வதற்கு வாய்ப்பு இல்லை. இந்த விவகாரம் தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் அஜித் பவார் ஊடகங்களிடம் கூறியதாவது,
`இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு முன்பு, நாகாலாந்தைச் சேர்ந்த எங்கள் கட்சியின் ஏழு எம்.எல்.ஏ.க்கள் என்னைச் சந்திக்க வந்தார்கள். அவர்கள் அங்கு பிரச்னைகளை எதிர்கொள்வதாகவும், அவர்களுக்காக களத்தில் எந்த வேலையும் செய்யப்படவில்லை என்றும் என்னிடம் கூறினார்கள்.
அது தொடர்பாக (நாகாலாந்து) முதல்வரிடமும் நான் பேசினேன். அவர்களுக்கிடையே அதிருப்தி நிலவியது உண்மைதான். கடந்த இரு தினங்களுக்கும் மேலாக எனக்கு உடல் நலமில்லாமல் இருந்ததால், முழு தகவல்கள் என்னிடம் இல்லை’ என்றார்.