

மகாராஷ்டிர துணை முதலமைச்சர் அஜித் பவார் சென்ற விமானம் விபத்துக்குள்ளானதில் அவர் உட்பட 6 பேர் உயிரிழந்தனர்.
மகாராஷ்டிரத்தில் பல கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெற்று வருகின்றன. இதில் தேசியவாத காங்கிரஸ் சார்பாக பாரமதி பகுதியில் பிரசாரம் மேற்கொள்வதற்காக அக்கட்சியின் தலைவரும் மகாராஷ்டிர துணை முதலமைச்சருமான அஜித் பவார் இன்று காலை மும்பையில் இருந்து சிறிய ரக விமானத்தில் புறப்பட்டார். அவருடன் 6 பேர் அந்த விமானத்தில் பயணித்ததாகக் கூறப்படுகிறது.
தரையிறங்கும் போது விபத்து
அஜித் பவார் சென்ற விமானம் பாராமதி விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்து தரையில் மோதி விபத்துக்குள்ளானது. கீழே விழுந்து நொறுங்கிய விமானம், உடனே தீப்பற்றியதால் அப்பகுதியில் கரும்புகை சூழ்ந்தது. காலை 9.12 மணி அளவில் இவ்விபத்து நடைபெற்றதை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் உள்ளிருந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் பலத்த காயமடைந்த அஜித் பவாருக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார். அவருடன் பயணித்த 6 பேரும் உயிரிழந்தனர்.
விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு
முதற்ட்ட விசாரணையில் விமானம் தரையிறங்கும் போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து காவல்துறையினர் விரிவான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் மகாராஷ்டிரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
யார் இந்த அஜித் பவார்?
மகாராஷ்டிராவில் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான ஆட்சியில் துணை முதலமைச்சராக இருந்தவர் அஜித் பவார். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் சகோதரர் ஆனந்த்ராவ் பவாரின் மகன் இவர். சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரசில் இருந்து பிளவை ஏற்படுத்தி தனியாக இயங்கிய அஜித் பவார், மராட்டிய சட்டமன்றத்துக்கு பாராமதி தொகுதியில் இருந்து 7 முறை தேர்ந்தெடுக்கப்பட்டார்.
6 முறை துணை முதலமைச்சர்
அஜித் பவார் மராட்டிய துணை முதலமைச்சராக 6 முறை பதவி வகித்துள்ளார். 3 ஆண்டுகளுக்கு பிறகு சரத் பவார் கட்சியுடன் இணைய அஜித் பவார் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில் விபத்தில் மரணம் அடைந்தார். அஜித் பவார் உயிரிழப்புக்கு தேசிய தலைவர்கள், பல்வேறு மாநிலங்களின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Six people, including Maharashtra Deputy Chief Minister Ajit Pawar, died in a plane crash in Maharashtra.