ஹரியாணா முதல்வராகப் பதவியேற்றார் பாஜகவைச் சேர்ந்த நாயப் சிங் சைனி.
கடந்த ஆகஸ்ட் 16-ல் ஹரியாணா மாநில சட்டப்பேரவைப் பொதுத்தேர்தலுக்கான தேதிகளை அறிவித்தது இந்திய தேர்தல் ஆணையம். இதன்படி அக்.1-ல் ஹரியாணாவின் 90 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் தொடர் விடுமுறை காரணமாக அக்.5-க்கு வாக்குப்பதிவு ஒத்திவைக்கப்பட்டது.
இந்தப் பொதுத்தேர்தலில் பாஜகவும், காங்கிரஸும் கூட்டணி இன்றி தனித்துப் போட்டியிட்டன. முதலில் காங்கிரஸுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட ஆம் ஆத்மி கட்சி பிறகு தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்தது. இதனை அடுத்து அக்.5-ல் நடந்த வாக்குப்பதிவில் 67.9 சதவீத வாக்குகள் பதிவாகின.
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளில் அறுதிப்பெரும்பான்மையுடன் காங்கிரஸ் கட்சி ஆட்சியைக் கைப்பற்றும் என்று கூறப்பட்டது. ஆனால் அக்.8-ல் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் பாஜகவுக்கு 48 இடங்களும், காங்கிரஸுக்கு 37 இடங்களும், இந்திய தேசிய லோக் தளத்துக்கு 2 இடங்களும் கிடைத்தன. 3 இடங்களில் சுயேட்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.
இதனை அடுத்து நடந்த பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில், தேர்தலுக்கு முன்பு ஹரியாணா முதல்வராக இருந்த நாயப் சிங் சைனி மீண்டும் முதல்வர் பதவிக்கு முன்மொழியப்பட்டார். இதன் பிறகு ஹரியாணா ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயாவை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார் நாயப் சிங் சைனி.
இந்நிலையில் ஹரியாணா மாநிலத்தின் பஞ்ச்குலாவில் இன்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில் தொடர்ந்து 2-வது முறையாக ஹரியாணா முதல்வராகப் பதவியேற்றார் நாயப் சிங் சைனி. அவருடன் பாஜகவைச் சேர்ந்த 9 எம்.எல்.ஏ.க்கள் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.
இதன் மூலம் தொடர்ந்து 3-வது முறையாக ஹரியாணாவில் பாஜக அரசு அமைந்துள்ளது. இந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.