வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸ் வேட்பாளராக களமிறங்கியுள்ளார்.
நடந்து முடிந்த 18-வது மக்களவை பொதுத்தேர்தலில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, கேரளாவின் வயநாடு மற்றும் உத்தர பிரதேசத்தின் ராய்பரேலி என இரு மக்களவை தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி, ஒரு வேட்பாளர் இரு மக்களவை தொகுதிகளில் இருந்து ஒரே நேரத்தில் தேர்வானாலும், அவற்றில் ஒரு மக்களவை தொகுதியின் உறுப்பினராக மட்டுமே தொடர முடியும். இதன்படி ராய்பரேலி தொகுதியின் மக்களவை உறுப்பினராக தொடர முடிவெடுத்த ராகுல் காந்தி, வயநாடு தொகுதியின் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.
அதே நேரம், காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன் கார்கேவின் தில்லி இல்லத்தில் வைத்து ராஜினாமா முடிவை அறிவித்தபோது, வயநாடு தொகுதி இடைத்தேர்தலில் தன் சகோதரி பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என அறிவித்தார் ராகுல் காந்தி.
இதனை அடுத்து, கடந்த அக்.15-ல் மஹாராஷ்டிரா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைப் பொதுத்தேர்தல் தேதிகளை அறிவித்த இந்திய தலைமை தேர்தல் ஆணையர், காலியாக உள்ள வயநாடு மக்களவை தொகுதியின் உறுப்பினரை தேர்ந்தெடுப்பதற்கான இடைத்தேர்தல் வாக்குப்பகுதி நவம்பர் 13-ல் நடைபெறும் என அறிவித்தார்.
வயநாடு தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிடும் நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சத்யன் மோக்கேரி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் பாஜகவின் வேட்பாளராக அக்கட்சியின் கேரள மாநில மகளிர் அணியின் பொதுச்செயலாளர் நவ்யா ஹரிதாஸ் போட்டியிடுவார் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.