
நவி மும்பை சர்வதேச விமான நிலையம் வளர்ச்சியடைந்த பாரதத்தை நோக்கிய சுவடுகளைப் பிரதிபலிக்கிறது என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் 2-வது சர்வதேச விமான நிலையமான ’நவி மும்பை சர்வதேச விமான நிலையம்’ இன்று திறக்கப்பட்டது. ரூ. 19,650 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்தப் புதிய விமான நிலையம், இந்தியாவை உள்நாட்டு விமானச் சந்தையில் 3-வது பெரிய நாடாக மாற்றியுள்ளது. இதன் விழாவில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, விமான நிலையத்தின் முதற்கட்ட சேவையைத் திறந்து வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-
“இன்று, மும்பை தனது இரண்டாவது சர்வதேச விமான நிலையத்தை வரவேற்கிறது. இதன்மூலம் ஆசியாவின் வான்வழிப் பயணத்தில் முன்னணி இணைப்பு முனையமாக மும்பை மாறியுள்ளது. இந்தப் புதிய விமான நிலையம் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான இணைப்பில் முக்கிய பங்காற்றவுள்ளது. கூடுதலாக, மும்பையில் முதல் முழு சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் சேவையும் இன்று தொடங்கப்பட்டுள்ளது. இது, மாநில மக்களின் போக்குவரத்தை எளிமையாக்கும் வளர்ச்சி. இந்த மெட்ரோ ரயில் சேவை, நவீன கட்டமைப்பு மேம்பாட்டின் மீது நாடு கொண்டிருக்கும் ஈடுபாட்டின் பெருமையாகத் திகழ்கிறது.
நவி மும்பை சர்வதேச விமான நிலையத் திட்டம், வளர்ச்சியடைந்த பாரதத்தை நோக்கிய சுவடுகளைப் பிரதிபலிப்பதாக உள்ளது. இந்தப் புதிய விமான நிலையம், மகாராஷ்டிராவின் விவசாயிகளை மத்திய மேற்கு மற்றும் ஐரோப்பிய சந்தைகளுடன் இணைக்கிறது. இந்த விமான நிலையம் பல முதலீடுகளை ஈர்த்து, அப்பகுதியில் தொழில் வளர உதவும்.
வளர்ச்சியடைந்த பாரதம் என்பது, பொது நலம் முதன்மையானதாகவும், அரசின் திட்டங்கள் குடிமக்கள் வாழ்வை எளிமைப்படுத்தும் வகையிலும் அமைந்திருக்கும் வேகம் மற்றும் முன்னேற்றத்தைக் குறிப்பதாகும். கடந்த 11 ஆண்டுகளாக நாம் இந்த அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன்தான் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உழைத்து வருகிறோம்.
நமது பலம் இளைய சமுதாயத்தை நம்பி இருக்கிறது. அதனால்தான் நமது கொள்கைகள் அவர்களுக்கான வேலை வாய்ப்பை நோக்கி உள்ளது. பெரிய முதலீடுகள் அதிமகான வேலை வாய்ப்புகளை ஈர்க்கும். கடந்த 2014 வரை நம் நாட்டில் 74 விமான நிலையங்களே இருந்தன. தற்போது 160 ஆக எண்ணிக்கை உயந்துள்ளது. சிறிய நகரங்களிலும் விமான நிலையங்கள் அமைக்கப்பட்டதால், மக்களுக்கு வான்வழிப் பயணம் சாத்தியமாகியுள்ளது. அதை மேலும் எளிமைப்படுத்தும் வகையில் உடான் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் முதன்முறை வான்வழி பயணத்தை மேற்கொண்ட பலரும் இத்திட்டத்திற்கு நன்றிகளைத் தெரிவித்துள்ளார்கள்” என்று பேசினார்.