நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராகப் பதவியேற்றார்!

நாட்டின் முதல் பிரதமர் நேருவுக்குப் பிறகு, தொடர்ந்து 3-வது முறையாகப் பிரதமராகப் பதவியேற்றவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராகப் பதவியேற்றார்!
ANI

நரேந்திர மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாக நாட்டின் பிரதமராகப் பதவியேற்றுக் கொண்டார்.

தில்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த பதவியேற்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நரேந்திர மோடிக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக 240 இடங்களில் வெற்றி பெற்றது. தேசிய ஜனநாயகக் கூட்டணி 293 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்துள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவராக பிரதமர் மோடி இருநாள்களுக்கு முன்பு தேர்வு செய்யப்பட்டார்.

இதைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவைச் சந்தித்த பிரதமர் மோடி ஆட்சியமைக்க உரிமை கோரினார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஜூன் 9-ல் பதவியேற்குமாறு அழைப்பு விடுத்தார்.

இதன்படி, தில்லியில் பதவியேற்பு விழாவுக்குக் கோலாகலமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, மாலத்தீவு அதிபர் முகமது மூயிஸ், நேபாளப் பிரதமர் புஷ்ப கமல் தாஹால், மோரீஷஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜகநாத், பூடான் பிரதமர் ஷெரிங் தோப்கே, செஷல்ஸ் துணை அதிபர் அகமது அஃபிப் ஆகிய ஏழு நாடுகளின் தலைவர்கள் இதில் பங்கேற்றுள்ளார்கள்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட், காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரும் மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டுள்ளார்கள்.

தொழிலதிபர் முகேஷ் அம்பானி, நடிகர்கள் ஷாருக் கான், ரஜினிகாந்த் உள்ளிட்டோர் பதவியேற்பு விழாவில் பங்கேற்றுள்ளார்கள். தமிழ்நாட்டிலிருந்து ஆளுநர் ஆர்.என். ரவி கலந்துகொண்டுள்ளார்.

இரவு 7.15 மணியளவில் குடியரசுத் தலைவர் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள பதவியேற்பு விழா மேடைக்கு பிரதமர் மோடி வந்தடைந்தார். இரவு 7.22 மணியளவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவியேற்பு விழா மேடைக்கு வந்தார். தேசிய கீதம் ஒலிக்கப்பட்டதுடன் பதவியேற்பு விழா தொடங்கியது.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைக்க, நாட்டின் பிரதமராகத் தொடர்ந்து மூன்றாவது முறையாகப் பதவியேற்றுக்கொண்டார் நரேந்திர மோடி.

72 அமைச்சர்கள் அடங்கிய பட்டியலானது குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. பிரதமர் மோடி பதவியேற்றதைத் தொடர்ந்து, அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டார்கள்.

ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்கரி, ஜெ.பி. நட்டா, சிவராஜ் சிங் சௌஹான், நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர், மனோஹர் லால், மதச்சார்பற்ற ஜனதா தளத் தலைவர் குமாரசாமி, பியூஷ் கோயல், தர்மேந்திர பிரதான், ஜிதன்ராம் மஞ்சி, ராஜீவ் ரஞ்சன் சிங், சர்வானந்த் சோனோவால், வீரேந்திர குமார், ராம் மோகன் நாயுடு பிரல்ஹாத் ஜோஷி, ஜூவல் ஓரம், கிரிராஜ் சிங், அஷ்வினி வைஷ்ணவ், ஜோதிராதித்ய சிந்தியா, பூபேந்திர யாதவ், கஜேந்திர சிங் ஷெகாவத், அன்னபூர்ணா தேவி, கிரண் ரிஜிஜு, ஹர்தீப் சிங் புரி, மன்சுக் மாண்டவியா உள்ளிட்டோர் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டார்கள்.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, அமைச்சர்களுக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டவுடன் மீண்டும் தேசிய கீதம் ஒலிக்கப்பட்டு, அத்துடன் பதவியேற்பு விழா நிறைவடைந்தது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in