தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவராக மோடி தேர்வு!

வரும் ஞாயிற்றுக்கிழமை பிரதமராகப் பதவியேற்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவராக மோடி தேர்வு!

தேசிய ஜனநாயகக் கூட்டணி நாடாளுமன்றக் குழுத் தலைவராக பிரதமர் நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மக்களவைத் தேர்தலில் பாஜக 240 இடங்களில் வெற்றி பெற்றதையடுத்து, மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைகிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணி குழுத் தலைவரைத் தேர்வு செய்ய பழைய நாடாளுமன்ற வளாகத்தின் மைய மண்டபத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பி.க்கள் கூட்டம் இன்று கூடியது. நாடாளுமன்றத்துக்குப் புதிதாகத் தேர்வான எம்.பி.க்களை பாஜக தேசியப் பொதுச்செயலாளர் தருண் சிங் வரவேற்றார்.

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, மணிப்பூர் முதல்வர் என். பிரேன் சிங், ஹரியாணா முதல்வர் நயாப் சைனி, மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான், சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தியோ சாய், ஹரியாணா முன்னாள் முதல்வர் மனோஹர் லால் கட்டார், கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் உள்ளிட்டோர் பங்கேற்றார்கள்.

பிஹாரில் 12 இடங்களில் வென்றுள்ள ஐக்கிய ஜனதா தளத் தலைவர் நிதிஷ் குமார் மற்றும் ஆந்திரத்தில் 16 இடங்களில் வெற்றி பெற்றுள்ள தெலுங்கு தேசத் தலைவர் சந்திரபாபு நாயுடு ஆகியோரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றார்கள். இவர்கள் இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடியின் அருகில் அமர வைக்கப்பட்டார்கள்.

பழைய நாடாளுமன்ற மைய மண்டபத்துக்கு வந்த பிரதமர் மோடி முதலில் அரசியலமைப்புச் சட்ட புத்தகத்தை வணங்கினார். பிரதமர் மோடி மேடைக்குச் சென்றவுடன் தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பி.க்கள் அனைவரும் மோடி.. மோடி.. என முழக்கமிட்டார்கள். பிரதமர் மோடி இதற்கு எழுந்து நின்று தலைவணங்க, தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பி.க்களும் எழுந்து நின்று கரகோஷங்களை எழுப்பினார்கள்.

இதைத் தொடர்ந்து, நாடாளுமன்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி குழுத் தலைவராக பிரதமர் நரேந்திர மோடியை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முன்மொழிந்தார்.

"தேசிய ஜனநாயகக் கூட்டணி குழுத் தலைவரைத் தேர்வு செய்வதற்காக நாம் இங்கு கூடியுள்ளோம். இந்தப் பதவிகள் அனைத்துக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் பெயரே சரியானத் தேர்வாக இருக்கும்" என்றார் ராஜ்நாத் சிங். அடுத்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோர் இதை வழிமொழிந்தார்கள்.

மதச்சார்பற்ற ஜனதா தளம் எம்.பி. குமாரசாமி, தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு ஆகியோரும் பிரதமர் மோடியை தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவராகத் தேர்வு செய்ய வழிமொழிந்தார்கள். ஐக்கிய ஜனதா தளத் தலைவர் நிதிஷ் குமார் இதை ஆதரித்துப் பேசினார்.

மஹாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, மஹாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார், லோக் ஜனசக்தியின் தேசியத் தலைவர் சிராக் பாஸ்வான், ஜன சேனா கட்சித் தலைவர் பவன் கல்யான் ஆகியோரும் மோடியை முன்மொழிந்ததற்கு ஆதரவு தெரிவித்தார்கள்.

இதைத் தொடர்ந்து, பிரதமர் மோடி தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நாடாளுமன்றக் குழுத் தலைவராக ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in