பிரதமர் மோடி (கோப்புப்படம்)
பிரதமர் மோடி (கோப்புப்படம்)ANI

பிரதமர் மோடி தங்கியதற்கானத் தொகையைச் செலுத்துங்கள்: தனியார் நட்சத்திர விடுதி எச்சரிக்கை

ஓராண்டுக்கு மேல் ஆனதால் வட்டியாக மட்டும் ரூ. 12.09 லட்சம் செலுத்தப்பட வேண்டியுள்ளது.
Published on

பிரதமர் நரேந்திர மோடி தங்கியதற்கானத் தொகையைச் செலுத்தாவிட்டால் சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கர்நாடகத்திலுள்ள தனியார் நட்சத்திர விடுதி எச்சரிக்கை விடுத்துள்ளது.

பிரதமர் மோடி கடந்தாண்டு ஏப்ரலில் கர்நாடக மாநிலம் மைசூரு சென்றிருந்தார். புலிகள் காப்பகத் திட்டத்தின் 50-ம் ஆண்டு விழாவைத் தொடக்கி வைப்பதற்காக பிரதமர் சென்றிருந்தார். தேசிய புலிகள் காப்பக ஆணையம் மற்றும் வனத் துறை அமைச்சகம் இணைந்து இதற்கு ஏற்பாடு செய்திருந்தது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மைசூரு சென்ற பிரதமர் மோடி தனியார் விடுதியொன்றில் தங்கினார். பிரதமர் மோடி தங்கியதற்கான விடுதிக் கட்டணமான ரூ. 80 லட்சம் இதுவரை செலுத்தப்படவில்லை எனத் தெரிகிறது.

தனியார் நட்சத்திர விடுதியின் பொதுமேலாளர், வனத் துறை அதிகாரி பசவராஜுவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ஜூன் 1, 2024-க்குள் நிலுவையிலுள்ள கட்டணத்தைச் செலுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மோடி தங்கியதற்கான தொகை ரூ. 80.6 லட்சம் மற்றும் ஓராண்டாகியும் இதுவரை செலுத்தப்படாமல் தாமதம் ஆனதற்காக ஆண்டுக்கு 18 சதவீதம் என்ற விகிதத்தில் வட்டியுடன் சேர்த்து இதைச் செலுத்த வேண்டும் என நட்சத்திர விடுதியின் பொதுமேலாளர் தெரிவித்துள்ளார். அதாவது, வட்டியாக மட்டும் ரூ. 12.09 லட்சம் செலுத்தப்பட வேண்டியுள்ளது.

இந்த நிகழ்ச்சி தொடர்புடைய செலவில் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கிடையிலான பிரச்னையால் நட்சத்திர விடுதியில் பிரதமர் தங்கியதற்கான தொகை இன்னும் நிலுவையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

logo
Kizhakku News
kizhakkunews.in