
அமெரிக்காவில் தடுப்புக் காவல் முகாமில் இருந்தபோது தனது தலைப்பாகையைக் கழற்றி அமெரிக்க ராணுவம் குப்பையில் வீசியதாகக் குற்றம்சாட்டியுள்ளார் இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்ட சீக்கியரான ஜதீந்தர் சிங்.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 112 இந்தியர்கள் நேற்று (பிப்.16) விமானம் மூலம் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸை வந்தடைந்தார்கள்.
இந்த 112 பேரில் அமிர்தசரஸைச் சேர்ந்த 23 வயது இளைஞரான ஜதீந்தர் சிங்கும் ஒருவர். அமெரிக்காவில் இருந்தபோது தடுப்புக் காவல் முகாமில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து இந்தியா டுடே செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது,
`கடந்தாண்டு நவம்பர் 27-ம் தேதி அமெரிக்க நாட்டு எல்லைக்குள் நுழைய முயன்றபோது பிடிபட்டேன். அதன்பிறகு தடுப்புக் காவல் முகாமுக்கு அனுப்பப்பட்டேன். கடந்த செப்டம்பர் 12-ல் இந்தியாவில் இருந்து புறப்பட்டேன்.
தடுப்புக் காவல் முகாமில் இருந்தபோது நான் தெரிவித்த எதிர்ப்பையும் மீறி அமெரிக்க அதிகாரிகள் என் தலைப்பாகையை அகற்றினார்கள். அவர்களின் விதிமுறைகள் என்று கூறி, என் தலைப்பாகையை குப்பைத் தொட்டியில் வீசினார்கள். முறையான உணவை எனக்கு அங்கு வழங்கப்படவில்லை. உருளைக்கிழங்கு சிப்ஸ், பழச்சாறு போன்றவற்றையே கொடுத்தார்கள்.
36 மணி நேர விமான பயணத்தின்போது எனது கைகள் விலங்கிடப்பட்டிருந்தன, கால்கள் கட்டப்பட்டிருந்தன. கழிப்பறையை பயன்படுத்தவும், உணவு கிடைப்பதிலும் சிக்கல்கள் இருந்தன. விமானம் தரையிறங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பு கை விலங்கு அகற்றப்பட்டது’ என்றார்.