என் உயிரே போனாலும்கூட..: சிறைக்குச் செல்லும் முன் வீடியோ வெளியிட்ட கெஜ்ரிவால்

"அவர்களுக்கு என்ன வேண்டும் என்று தெரியவில்லை. எதற்காக இப்படி செய்கிறார்கள் என்றும் புரியவில்லை."
என் உயிரே போனாலும்கூட..: சிறைக்குச் செல்லும் முன் வீடியோ வெளியிட்ட கெஜ்ரிவால்
படம்: https://x.com/ArvindKejriwal

சர்வாதிகாரத்திடமிருந்து நாட்டைக் காப்பாற்றுவதற்காக சிறைக்குச் செல்வதில் தான் பெருமை கொள்வதாக தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

தேர்தல் பிரசாரம் மேற்கொள்வதற்காக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1 வரை உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது. ஜூன் 2-ல் திஹார் சிறையில் கெஜ்ரிவால் சரணடைய வேண்டும். இந்த நிலையில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ள கெஜ்ரிவால், நாட்டைக் காப்பாற்றுவதற்காக, என் உயிரே போனாலும்கூட யாரும் வருந்தக் கூடாது என அவர் பேசியுள்ளார்.

"நாளையுடன் என்னுடைய 21 நாள்கள் நிறைவடைகின்றன. நாளை மறுநாள் நான் சரணடைய வேண்டும். எத்தனை நாள்கள் என்னை சிறையில் வைக்கப்போகிறார்கள் எனத் தெரியவில்லை. ஆனால், நான் மிகுந்த உத்வேகத்துடன்தான் உள்ளேன். நாட்டை சர்வாதிகாரத்திடமிருந்து காப்பாற்றுவதற்காக நான் சிறை செல்கிறேன். இதை எண்ணி நான் பெருமை கொள்கிறேன். என்னை நிலையகுலையச் செய்யவும், மண்டியிடச் செய்யவும் நிறைய முறை முயற்சித்துள்ளார்கள். ஆனால், நான் அடிபணியவில்லை.

நான் சிறையிலிருந்தபோது அவர்கள் என்னைப் பல்வேறு வழிகளில் கொடுமைப்படுத்தினார்கள். எனக்கான மருந்துகளை நிறுத்தினார்கள். கடந்த 20 ஆண்டுகளாக நீரிழிவு நோயால் கடுமையாக அவதிக்குள்ளாகி வருகிறேன். 10 ஆண்டுகளாக தினசரி நான்கு முறை இன்சுலின் செலுத்தி வருகிறேன். சிறையில் நிறைய நாள்கள் அவர்கள் எனக்கான இன்சுலின் ஊசியை நிறுத்தினார்கள். என்னுடைய சர்க்கரை அளவு 300-325-ஐ எட்டியது. சர்க்கரையின் அளவு நீண்ட நாள்களுக்கு அதிகமாக இருந்தால் சிறுநீரகம், கல்லீரல் பாதிப்படையும். அவர்களுக்கு என்ன வேண்டும் என்று தெரியவில்லை. எதற்காக இப்படி செய்கிறார்கள் என்றும் புரியவில்லை.

50 நாள்களாக நான் சிறையில் உள்ளேன். இந்த 50 நாள்களில் நான் 6 கிலோ எடை குறைந்துள்ளேன். சிறைக்குச் சென்றபோது என்னுடைய எடை 70 கிலோ. தற்போது 64 கிலோவாக எடை குறைந்துள்ளேன். சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட பிறகும் என்னுடைய எடை கூடவில்லை. உடலில் ஏதேனும் பெரிய பிரச்னை இருக்கலாம் என்றும், நிறைய பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் மருத்துவர் கூறுகிறார். நாளை மறுநாள் பிற்பகல் 3 மணிக்கு நான் வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்று சரணடைய வேண்டும். நான் சிறையிலிருந்து வந்தவுடன் அனைத்துப் பெண்களுக்கும் மாதந்தோறும் ரூ. 1,000 வழங்குவேன்.

என் குடும்பத்துக்காகப் பிராத்தனை செய்யுங்கள். அவர் வயது முதிர்ந்தவர்கள். என் தாயார் உடல்நலம் குன்றியிருக்கிறார். என் பெற்றோர்களுக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள்.

நாம் அனைவரும் சர்வாதிகாரத்துக்கு எதிராகப் போராடி வருகிறோம். நாட்டைக் காப்பாற்ற எனக்கு ஏதேனும் நேர்ந்தால், உயிரயை இழந்தாலும்கூட, வருத்தம்கொள்ள வேண்டாம். உங்களுடையப் பிரார்த்தனைகளால்தான் நான் உயிருடன் இருக்கிறேன். உங்களுடைய ஆசிர்வாதங்கள் வரும் காலங்களிலும் என்னைப் பாதுகாக்கும். கடவுள் விரும்பினால், நான் விரைவில் சிறையிலிருந்து வெளியே வருவேன்" என்றார் அரவிந்த் கெஜ்ரிவால்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in