தாலியின் முக்கியத்துவத்தைப் பிரதமர் புரிந்து கொண்டிருந்தால்..: மோடியை சாடிய பிரியங்கா காந்தி

"விவசாயிகள் போராட்டத்தின்போது, 600 விவசாயிகள் தங்களுடைய வாழ்க்கையை இழந்தார்கள். இந்த விதவைப் பெண்களின் தாலியைக் குறித்து பிரதமர் சிந்தித்தாரா?"
தாலியின் முக்கியத்துவத்தைப் பிரதமர் புரிந்து கொண்டிருந்தால்..: மோடியை சாடிய பிரியங்கா காந்தி
ANI

விவசாயிகள் போராட்டம், மணிப்பூர் கலவரம் விதவைப் பெண்களின் தாலியைக் குறித்து பிரதமர் நரேந்திர மோடி சிந்திக்கவில்லை என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பிரியங்கா காந்தி இன்று பிரசாரம் மேற்கொண்டார். பெண்களின் தாலி, தங்கத்தை காங்கிரஸ் பறித்துவிடும் என்று பிரதமர் மோடி மேற்கொண்ட பிரசாரத்துக்குப் பதிலளிக்கும் வகையில் பிரியங்கா காந்தி பேசினார்.

"கடந்த இரு நாள்களாக உங்களுடைய தாலி மற்றும் தங்கத்தைப் பறிக்க காங்கிரஸ் விரும்புவதாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்தியா சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆகின்றன. 55 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சியில் இருந்துள்ளது. உங்களுடைய தங்கத்தையும், தாலியையும் யாராவது பறித்தார்களா?

இந்தியா போரிலிருந்தபோது, இந்திரா காந்தி தனது தங்கத்தை நாட்டுக்காகக் கொடுத்தார். என் அம்மாவின் (சோனியா காந்தி) தாலி நாட்டுக்காகத் தியாகம் செய்யப்பட்டது.

உண்மை என்னவென்றால், அவர்களுக்குப் (பாஜக) பெண்கள் படும் கஷ்டங்கள் புரியாது. பெண்களின் மனதில் இருக்கும் சேவை மனப்பான்மை, நாட்டின் கலாசாரத்தோடு வேரூன்றியுள்ளது. வீட்டிலுள்ள அனைவரும் உறங்கும் வரை பெண்கள் உறங்க மாட்டார்கள். தனது குடும்பம் பொருளாதார ரீதியான சிக்கலை எதிர்கொண்டால், பெண்கள் தங்களுடைய தங்கத்தை அடமானம் வைப்பார்கள். தான் பட்டினியாக இருந்தாலும், குடும்பத்திலுள்ள எவர் ஒருவரையும் பட்டினியாக இருக்க அனுமதிக்க மாட்டார்கள். அவர்களுடையப் போராட்டம் பாஜகவினருக்குப் புரியாது.

தாலியின் முக்கியத்துவத்தை பிரதமர் புரிந்துகொண்டிருந்தால், இதுமாதிரியான ஒழுக்கமற்ற முறையில் பேசியிருக்க மாட்டார். பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது, பெண்களின் சேமிப்புகளை பிரதமர் பறித்தார். விவசாயிகள் போராட்டத்தின்போது, 600 விவசாயிகள் தங்களுடைய வாழ்க்கையை இழந்தார்கள். இந்த விதவைப் பெண்களின் தாலியைக் குறித்து பிரதமர் சிந்தித்தாரா? மணிப்பூரில் ஒரு பெண் நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது மோடி எதுவும் பேசாமல் அமைதி காத்தார். அவர்களுடைய தாலியைக் குறித்து பிரதமர் சிந்தித்தாரா? இன்று வெறும் வாக்குகளுக்காக இதுமாதிரியான விஷயங்களை அவர் பேசி வருகிறார். இதற்கெல்லாம் பிரதமர் மோடி வெட்கப்பட வேண்டும்" என்றார் பிரியங்கா காந்தி.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in