
வருமானம் முற்றிலுமாக நின்றுவிட்டதால், அமைச்சர் பொறுப்பிலிருந்து விலகி மீண்டும் நடிக்க விரும்புவதாக மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார்.
திரிச்சூர் நாடாளுமன்ற உறுப்பினரும் நடிகருமான சுரேஷ் கோபி கண்ணூரில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பேசியதாவது:
"உண்மையில் நான் நடிப்பைத் தொடர விரும்புகிறேன். நிறைய சம்பாதிக்க வேண்டும். என் வருமானம் தற்போது முற்றிலுமாக நின்றுவிட்டது. அமைச்சராக வேண்டும் என ஒருபோதும் நான் கோரியதே இல்லை.
அமைச்சராக விருப்பமில்லை, நடிப்பைத் தொடரவே விரும்புகிறேன் என தேர்தலுக்கு முந்தைய நாள் செய்தியாளர்களிடம் கூறினேன். 2008-ல் நான் கட்சியின் உறுப்பினர் ஆனேன். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் எம்.பி. நான். எனவே, என்னை அமைச்சராக்க வேண்டும் என கட்சி நினைத்தது.
நடிப்பு தான் எனக்கு வருமானத்தைக் கொடுக்கிறது. அந்த வருமானத்தை வைத்துக்கொண்டு, என் குடும்பத்தினர் மற்றும் மற்றவர்களுக்கு உதவ விரும்புகிறேன். ஆனால், என் வருமானம் தற்போது பாதிக்கப்பட்டுள்ளது.
என்னுடைய இடத்தில் சதானந்தன் மாஸ்டர் தான் மத்திய அமைச்சராக இருக்க வேண்டும். இதை நான் மனதாரச் சொல்கிறேன். கேரள அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயத்தின் தொடக்கமாக இது இருக்கும் என நான் நம்புகிறேன்" என்றார் சுரேஷ் கோபி.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, சதானந்தன் மாஸ்டரை இந்த ஆண்டு தொடக்கத்தில் நியமன எம்.பி.யாக நியமித்தார்.
கலைத் துறையில் ஆற்றிய பங்களிப்புக்காக 2016-ல் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார் சுரேஷ் கோபி. 2019 மக்களவைத் தேர்தல் மற்றும் 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 2024 மக்களவைத் தேர்தலில் திரிச்சூர் தொகுதியில் போட்டியிட்டு எதிர்த்துப் போட்டியிட்ட சிபிஐ வேட்பாளர் விஎஸ் சுனில் குமாரை 74 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி மக்களவைக்குத் தேர்வானார். இதன்மூலம், கேரளத்திலிருந்து மக்களவைக்குத் தேர்வான முதல் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் எனும் பெருமையை இவர் பெற்றார். பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு மற்றும் சுற்றுலாத் துறைகளின் மத்திய இணை அமைச்சராக சுரேஷ் கோபி உள்ளார்.
Suresh Gopi | Kerala MP | Kerala BJP | BJP MP | Sadanandan Master |