என் தந்தையை விஷம் வைத்து கொன்றுவிட்டனர்: உமர் அன்சாரி

பாஜக எம்எல்ஏ கிருஷ்ணானந்த் கொலை வழக்கில் முக்தார் அன்சாரிக்குக் கடந்த ஆண்டு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
முக்தார் அன்சாரியின் மகன் உமர் அன்சாரி
முக்தார் அன்சாரியின் மகன் உமர் அன்சாரி

தனது தந்தை முக்தார் அன்சாரியை விஷம் வைத்து மெல்ல மெல்ல கொன்றுவிட்டதாக அவரது மகன் உமர் அன்சாரி கூறியுள்ளார்.

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த முக்தார் அன்சாரி, ரௌடியாக இருந்து அரசியல்வாதியாக மாறியவர். இவர் ஐந்து முறை சட்டப்பேரவை உறுப்பினராக இருந்திருக்கிறார். இவர் மீது 60-க்கும் மேலான வழக்குகள் உள்ளன. பல்வேறு வழக்குகளில் தண்டனைபெற்ற இவர், கடந்த 2005-ம் ஆண்டு முதல் சிறையில் இருந்து வந்தார். பாஜக எம்எல்ஏ கிருஷ்ணானந்த் கொலை வழக்கில் அவருக்குக் கடந்த ஆண்டு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. மேலும் மோசடி வழக்கில் அவருக்கு வாழ்நாள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

சிறையிலிருந்த அன்சாரி, அடிவயிறு வலிப்பதாகக் கூறினார். இதையடுத்து கடந்த செவ்வாய்க்கிழமை பண்டாவில் உள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். மேல் சிகிச்சைக்காக அவர் துர்காவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் வியாழக்கிழமை அவர் மாரடைப்பால் உயிரிழந்த்தாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அவரது குடும்பத்தினர் முக்தார் அன்சாரிக்கு உணவில் விஷயம் கலந்துகொடுத்து கொன்றுவிட்டதாக சந்தேகிக்கின்றனர்.

முக்தார் அன்சாரியின் மகன் உமர் அன்சாரி கூறியதாவது:

"எனது தந்தை முக்தார் அன்சாரிக்கு உணவில் விஷம் வைத்து மெல்ல மெல்ல கொன்றுவிட்டனர். இந்த விவகாரம் குறித்து நீதிமன்றம் செல்வேன். அங்கு எனக்கு நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன்

சிறையில் எனது தந்தை இறந்த செய்திகூட எனக்கு நிர்வாகத்தினர் தெரிவிக்கவில்லை. ஊடகங்கள் மூலமே அந்த செய்தியை நான் தெரிந்துகொண்டேன். இரண்டு நாட்கள் முன்பு அவரை நான் பார்க்க வந்தபோது எனக்கு அனுமதி கொடுக்கவில்லை. பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு தான் முழு விவரம் தெரியவரும். நிச்சயம் நாங்கள் நீதிமன்றம் செல்வோம்" என்றார் அவர்.

இதனிடையே முக்தார் அன்சாரி மறைவுக்கு ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அஸ்ஸாதுதீன் ஒவைசி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். அவருக்கு உணவில் விஷம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டும் நிர்வாகம் அதை கண்டுகொள்ளவில்லை. இது மிகவும் கண்டனத்துக்குரியது என்று அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

முக்தார் அன்சாரியின் மரணம் குறித்து முழுமையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று சமாஜவாதி கட்சித் தலைவர் அமீக் ஜமை கோரியுள்ளார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தலைவரான சுரேந்திர ராஜ்புத்தும், அன்சாரி மரணம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். அவர் மாரடைப்பால் உயிரிழந்தார் என்பது நம்பும்படியாக இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in