வெள்ளத்தில் மூழ்கிய மும்பை: மஹாராஷ்டிரத்தில் 12-14 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலங்கள் பாதிப்பு! | Mumbai Rains

மும்பையின் சில பகுதிகளில் சுமார் 300 மி.மீ. மழை பெய்துள்ளது, இதன் விளைவாக தண்ணீர் தேங்கி, புறநகர் உள்ளூர் ரயில்களின் இயக்கத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
வெள்ளத்தில் மூழ்கிய மும்பை: மஹாராஷ்டிரத்தில் 12-14 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலங்கள் பாதிப்பு! | Mumbai Rains
ANI
1 min read

கடந்த 2-3 நாள்களாக பெய்துவரும் தொடர் கனமழையால் மும்பை மற்றும் அதன் அண்டை மாவட்டங்கள் முழுமையாக ஸ்தம்பித்துள்ளன. குறிப்பாக, மும்பை நகரம் முழுவதும் வெள்ள நீர் தேங்கியுள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பொருளாதார தலைநகரான மும்பையில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், இன்றும் (ஆக. 19) மும்பை நகரம் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

பிற்பகல் 2 மணி நிலவரப்படி, மும்பை விமான நிலையத்தில் இருந்து புறப்படும் 234 விமானங்களின் புறப்பாடு தாமதமாகியுள்ளதாகவும், 141 விமானங்களின் வருகையும் தாமதமாகியுள்ளன என்றும் ஃபிளைட்ராடரின் தரவுகள் தெரிவிக்கின்றன.

கனமழை பாதிப்பால் மும்பையின் சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் (சி.எஸ்.எம்.டி.) மற்றும் தானே ரயில் நிலையங்களுக்கு இடையிலான ரயில் சேவைகளும், குர்லா மற்றும் சி.எஸ்.எம்.டி. ரயில் நிலையங்களுக்கு இடையிலான துறைமுக வழித்தட ரயில் சேவைகளும் மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

நாள் முழுவதும் மிக அதிக கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் மூடப்பட்டிருந்தன. குறிப்பாக, நான்தெட் மாவட்டத்தில் ஏற்பட்ட மேக வெடிப்பு சம்பவத்தால் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று (ஆக. 19) நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ், கடந்த இரண்டு நாட்களில் பெய்த கனமழையால் சுமார் 12-14 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலங்கள் மாநிலத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்தார்.

மேலும், `மும்பையின் சில பகுதிகளில் சுமார் 300 மி.மீ. மழை பெய்துள்ளது, இதன் விளைவாக தண்ணீர் தேங்கி, புறநகர் உள்ளூர் ரயில்களின் இயக்கத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது’ என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in