
கேரள செவிலியர் நிமிஷா பிரியாவுக்கான மரண தண்டனை ஏமன் நாட்டில் நிறைவேற்றப்படவுள்ளதாக செய்தி வெளியான நிலையில், அவரை காப்பாற்றக்கோரி மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு கேரள எம்.பி. ஜான் பிரிட்டாஸ் கடிதம் எழுதியுள்ளார்.
கேரளா மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த நிமிஷா பிரியா, ஏமன் நாட்டில் செவிலியராகப் பணிபுரிந்து வந்த நிலையில், கடந்த 2014-ல் அங்கு உள்நாட்டுப் போர் தொடங்கியது. இதைத் தொடர்ந்து, அந்நாட்டைச் சேர்ந்த தலோல் அப்டோ மஹ்தி என்பவரின் உதவியுடன் 2015-ல் ஏமன் தலைநகர் சனாவில் தனியார் கிளினிக் ஒன்றை நிமிஷா பிரியா தொடங்கியுள்ளார்.
ஏமன் நாட்டுச் சட்டப்படி, அந்நாட்டின் குடிமக்கள் மட்டுமே அங்கே (கிளினிக் உள்ளிட்ட) தொழில்களில் ஈடுபடமுடியும். இதனால் மஹ்தியின் உதவியுடன் அவரது பெயரில் உரிமம் பெற்று கிளினிக்கை நிமிஷா தொடங்கியுள்ளார்.
ஒரு கட்டத்தில், கிளினிக்கில் கிடைத்த வருமானத்தில் பெரும்பகுதியை எடுத்துக்கொண்டதோடு மட்டுமல்லாமல், நிமிஷாவைத் தனது மனைவி எனப் பிறரிடம் கூறியதுடன் அவ்வப்போது அவரிடம் பாலியல் அத்துமீறலிலும் மஹ்தி ஈடுபட்டுள்ளார். இதற்கிடையே நிமிஷாவின் பாஸ்போர்ட் மஹ்தி வசம் இருந்துள்ளது.
இதனால், அங்கிருந்து தப்பிக்கும் நோக்கத்தில் கடந்த 2017-ல், ஊசி மூலம் மஹ்திக்கு நிமிஷா மயக்க மருந்தை செலுத்தியுள்ளார் நிமிஷா. ஆனால் இதில் அவர் உயிரிழந்தார்.
இதைத் தொடர்ந்து, நிமிஷா பிரியாவை ஏமன் நாட்டு காவல்துறையினர் கைது செய்து சிறையிலடைத்தனர். மஹ்தியைக் கொலை செய்த குற்றத்திற்காக, கடந்த 2018-ல் நிமிஷா பிரியாவிற்கு அங்குள்ள நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இதனை அந்நாட்டு அதிபர் ரஷாத் அல் அலிமி கடந்தாண்டு உறுதிபடுத்தினார்.
இந்நிலையில், 36 வயதாகும் நிமிஷாவுக்கான மரண தண்டனை வரும் ஜூலை 16-ல் நிறைவேற்றப்படவுள்ளதாக தற்போது செய்தி வெளியாகியுள்ளது. கடந்த 2024-ல் ஏமன் தலைநகர் சனாவிற்கு சென்ற நிமிஷா பிரியாவின் தாயார் பிரேமா குமாரி, இன்று வரை அங்கேயே தங்கி தனது மகளை மீட்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
மரண தண்டனையில் இருந்து நிமிஷா பிரியாவை காப்பாற்றும் வகையில் ஏமன் நாட்டு அதிகாரிகளுடனும், உயிரிழந்த மஹ்தி குடும்பத்தினருடன், `சேவ் நிமிஷா பிரியா ஆக்ஷன் கவுன்சில்’ என்ற குழு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.
நிமிஷா பிரியாவுக்கான மரண தண்டனையைக் கைவிடக்கோரி தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திவரும் இந்த குழு, மெஹ்தியின் குடும்பத்திற்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி உதவியை வழங்க முன்வந்துள்ளது.
இந்த அமைப்புடன் நெருங்கி செயல்படும் மனிதநேய செயற்பாட்டாளர் சாமுவேல் ஜெரோம் இந்தியா டுடேவிற்கு அளித்த பேட்டியில், `செல்வாக்கு மிக்க நபர்களின் உதவியை நாடி, மஹ்தி குடும்பத்தினரை இந்த சலுகையை ஏற்றுக்கொள்ள சம்மதிக்க வைப்பதுதான் எங்களுக்கு இருக்கும் ஒரே வழி’ என்றார்.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் தலையிட்டு நிமிஷா பிரியாவை மரண தண்டனையில் இருந்து காப்பாற்றக்கோரி, சிபிஎம் கட்சியைச் சேர்ந்த கேரள மாநிலங்களவை எம்.பி. ஜான் பிரிட்டாஸ், மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.