
உத்தரப் பிரதேசத்தில் ஹோலிப் பண்டிகையை முன்னிட்டு மசூதிகள் தார்ப்பாய்களால் மூடப்பட்டுள்ளன.
நாடு முழுக்க ஹோலி பண்டிகை வெள்ளியன்று கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு உத்தரப் பிரதேசத்தில் பல்வேறு மசூதிகள் தார்ப்பாய் மூலம் மூடப்பட்டுள்ளன. ரமலான் மாதத்தில் வெள்ளியன்று ஹோலி பண்டிகை வருவதால் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அமைதியைக் கடைபிடிக்க, டிஜிபி பிரஷாந்த் குமார் அனைத்து மாவட்ட காவல் துறைத் தலைவர்கள், ஆணையர்கள் மற்றும் மண்டலத் தலைவர்கள் உள்ளிட்டோருக்குக் கடிதம் எழுதியுள்ளார். பிரச்னை ஏற்படக்கூடிய பகுதிகள் எவை என்பதைக் கண்டறிந்து அங்கு கூடுதல் காவல் படைகள் மற்றும் துணை ராணுவப் படைகளைக் குவிக்க உத்தரவிட்டுள்ளார்.
ஹோலி பண்டிகையை முன்னிட்டு, சில பகுதிகளில் வழிபாட்டு நேரத்தை பிற்பகல் 2 மற்றும் பிற்பகல் 2.30 என்று மாற்றி இஸ்லாமிய மத குருக்கள் அறிவித்துள்ளார்கள். ஷாஜஹான்பூர் மாவட்டத்தில் 75-க்கும் மேற்பட்ட மசூதிகள் தார்ப்பாய்கள் அல்லது துணியால் கொண்டு மறைக்கப்பட்டுள்ளன.
மற்ற மாவட்டங்களிலும் தார்ப்பாய் மூலம் மசூதிகள் மறைக்கப்பட்டாலும் ஷாஜஹான்பூர் மாவட்டம் கூடுதல் கவனம் பெற்றது. காரணம், ஹோலி கொண்டாட்டத்தில் இந்த மாவட்டத்துக்கென பிரத்யேக மரபு ஒன்று உள்ளது.
சுதந்திரத்துக்கு முன்பிலிருந்து ஜுதா மார் ஹோலி என்ற மரபு கடைபிடிக்கப்படுகிறது. ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு எதிராகப் போராட்டம் நடத்துவதற்காக ஆங்கிலேய ஆட்சியாளர்களைப்போல வேடமிட்டவரைக் கொண்டு ஊர்வலம் நடத்தப்படும். இவருடையக் கழுத்தில் காலணிகள் அணிவிக்கப்படும். ஊர்வலத்தின்போது, அவர் மீது காலணிகள் வீசப்படும்.
இப்படியாக காலணிகளை வீசும்போது சட்டம்-ஒழுங்கு பிரச்னை எதுவும் வந்துவிடக் கூடாது என்பதற்காக மசூதிகள் அனைத்தும் தார்ப்பாய் மூலம் மூடப்பட்டுள்ளன.
ஷாஜஹான்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்பி ராஜேஷ் கூறுகையில், "ஒரு மாதத்துக்கு முன்பே அமைதிக் குழுக் கூட்டத்தைத் தொடங்கிவிட்டோம். பாதுகாப்புப் படைகள் தேவையின் அளவை முன்கூட்டியே தெரிவித்துவிட்டோம். மொத்தம் 3,500 பாதுகாப்புப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. டிரோன், சிசிடிவி மூலம் கண்காணிக்கப்படும்" என்றார் அவர்.