மஹாராஷ்டிரத்தில் வேகமாகப் பரவும் நரம்பியல் நோய்: நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

மஹாராஷ்டிரத்தில் வேகமாகப் பரவும் நரம்பியல் நோய்: நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

நோய் பாதிப்பை எதிர்கொள்ளும் வகையில் மஹாராஷ்டிர மாநில அரசுக்கு உதவியாக 7 நபர் கொண்ட மத்திய நிபுணர் குழுவை அமைத்துள்ளது மத்திய சுகாதார அமைச்சகம்.
Published on

மஹாராஷ்டிரத்தில் அதிவேகமாகப் பரவும் கியான் பர்ரே சிண்ட்ரோம் என்கிற நரம்பியல் நோயால் 100-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர், ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மஹாராஷ்டிர மாநிலம் புனே மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் `கியான் பர்ரே சிண்ட்ரோம்’ (Guillain barre syndrome) என்கிற நரம்பியல் நோய் கடந்த சில நாட்களாக மிக வேகமாகப் பரவி வருகிறது. இந்த நோய் மனிதர்களின் நரம்பு மண்டலத்தையும், நோய் எதிர்ப்பு மண்டலத்தையும் தீவிரமாகத் தாக்கும் தன்மையுடையது.

புனேவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில், இந்த நோயால் 28 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை இன்று (ஜன.27) 101-ஐ எட்டியுள்ளது. நோயால் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து எடுக்கப்பட்ட ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்ததில், இவர்கள் அனைவருக்கும் கியான் பர்ரே சிண்ட்ரோம் நோய் பாதிப்பை ஏற்படுத்தும் பாக்டீரியாவால் பாதிப்படைந்துள்ளது உறுதிசெய்யப்பட்டது.

மேலும், இந்த நோய் பாதிப்பால் உயிரிழந்த ஒரு நபர் சோலாபூரைச் சேர்ந்தவர். ஆரம்பத்தில் அந்த நபருக்கு சளி மற்றும் இருமல் தொந்தரவு ஏற்பட்டு பின்னர் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டுள்ளார். பின்னர் நோய் தீவிரமடைந்து ஐசியூவில் சிகிச்சை பெற்று வந்த அந்த நபர், பக்கவாதம் ஏற்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

திடீரென அதிகரித்துள்ள இந்த நோய் பாதிப்பை எதிர்கொள்ளும் வகையில் மஹாராஷ்டிர மாநில அரசுக்கு உதவியாக 7 பேர் கொண்ட மத்திய நிபுணர் குழுவை அமைத்துள்ளது மத்திய சுகாதார அமைச்சகம். மேலும், நோய் பாதிப்பு குறித்து கண்டறிய வீடு விடாக மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

logo
Kizhakku News
kizhakkunews.in