
ஒடிஷாவில் கரையைக் கடகவுள்ள டானா புயல் காரணமாக 350-க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
வங்கக் கடலில் உருவாகியுள்ள டானா புயல் ஒடிஷாவில் அக்டோபர் 25 அன்று அதிகாலையில் தீவிரப் புயலாகக் கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. புயல் கரையைக் கடக்குமபோது காற்றின் வேகம் மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயல் எதிரொலியால் அக்டோபர் 23 மற்றும் அக்டோபர் 25 இடையே புறப்பட வேண்டியிருந்த ஏறத்தாழ 350 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஹௌரா - செகந்திராபாத் ஃபலக்னுமா விரைவு ரயில், காமாக்யா - யெஷ்வந்த்பூர் ஏசி விரைவு ரயில், ஹௌரா - புரி ஷதாப்தி விரைவு ரயில், ஹௌரா - புவனேஸ்வர் ஷதாப்தி விரைவு ரயில் மற்றும் ஹௌரா - யெஷ்வந்த்பூர் விரைவு ரயில் உள்பட 150-க்கும் மேற்பட்ட விரைவு ரயில் மற்றும் பயணிகள் ரயிலை தென்கிழக்கு ரயில்வே ரத்து செய்துள்ளது. கொல்கத்தாவை மையமாகக் கொண்டுள்ள தென்கிழக்கு ரயில்வே மேற்கு வங்கம், ஒடிஷா மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களிலுள்ள ரயில்வே நிர்வாகத்தைக் கவனித்து வருகிறது. தேவைப்பட்டால் மேற்கொண்டு ரயில்கள் ரத்து செய்யப்படலாம் என்றும் தென்கிழக்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
இதேபோல ஈஸ்ட்கோஸ்ட் ரயில்வே மொத்தம் 198-க்கும் மேற்பட்ட ரயில்களை ரத்து செய்துள்ளது. ஹௌரா - செகந்திராபாத், ஷாலிமர் - புரி, காமாக்யா - பெங்களூரு, புதுதில்லி - புவனேஸ்வர், கரக்பூர் - விழுப்புரம், ஹௌரா - புவனேஸ்வர், ஷாலிமர் - ஹைதராபாத், ஹௌரா - புரி விரைவு ரயில்கள் உள்பட பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
கிழக்கு ரயில்வே பல ரயில்களை ரத்து செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. பாட்னா - எர்ணாகுளம், கொல்கத்தா - புரி, புரி - கொல்கத்தா, திப்ருகர் - கன்னியாகுமரி, பெங்களூரு - குவாஹட்டி விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.