
கடந்த சில நாட்களாக தென்மேற்குப் பருவமழை கேரளா மாநிலத்தில் தீவிரமடைந்துள்ளது. இதை அடுத்து கேரளாவின் வயநாடு பகுதியில் உள்ள அட்டமலை, முண்டக்கை, சூரல்மலை கிராமங்களில் நேற்று நள்ளிரவு மற்றும் இன்று (ஜூலை 30) அதிகாலையில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
தொடர் மழையால் அந்தப் பகுதியில் இருக்கும் இருவழிஞ்சி நதியில் கடுமையான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த மழை வெள்ளத்தால் நிலச்சரிவு ஏற்பட்டு, 100 முதல் 150 வரையிலான வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் தொடர் கனமழையால் பொதுமக்கள் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டிருந்த முகாமும் நிலச்சரிவில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் நூற்றுக்கணக்கான மக்கள் சிக்கியுள்ளனர். இதுவரை 20-க்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
இந்த மழை வெள்ளத்தில் முண்டக்கை கிராமத்தை இணைக்கும் முக்கிய பாலம் அடித்துச் செல்லபட்டுள்ளதால் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. மீட்புக் குழுவினரால் முண்டக்கை கிராமத்தை அடைய முடியாததால், உதவி கிடைக்காமல் கிராம மக்கள் தவித்து வருகின்றனர் என்று செய்தி வெளியாகியுள்ளது. மீட்புப் பணிகளில் விரைந்து ஈடுபட கோவை மாவட்டம் சூலூரில் இருந்து விமானப் படை ஹெலிகாப்டர்கள் வயநாட்டுக்கு விரைந்துள்ளன.
கனமழை காரணமாக கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள வனிமல், விளாங்காடு ஆகிய இடங்களிலும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்திலும் நேற்று இரவில் இருந்து விடிய விடிய கனமழை பெய்துவருகிறது.