மைக்ரோசாஃப்ட் மென்பொருள் கோளாறு: உலகம் முழுவதும் 1000-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து
இன்று (ஜூலை 19) நடந்த மைக்ரோசாஃப்ட் மென்பொருள் கோளாறு காரணமாக உலகம் முழுவதும் 1300-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மைக்ரோசாஃப்ட் மென்பொருள் கோளாறால் அதிகபட்சமாக அமெரிக்காவில் 512 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஜெர்மனியில் 92 விமானங்களும், இந்தியாவில் 55 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து போன்ற நாடுகளில் விமான சேவைகள் முழுமையாக முடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் முக்கிய விமான நிலையங்களில் விமான சேவைகள் பாதிப்புக்கு உள்ளானதைத் தொடர்ந்து பயணிகள் பல மணி நேரமாக விமான நிலையங்களில் காத்திருக்கும் நிலை உருவானது. எனவே பயணிகளுக்குத் தேவையான உணவு, குடிநீர் போன்றவற்றை வழங்க மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு அறிவுறுத்தியுள்ளார்.
`பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களை உணர்ந்துள்ளோம். துரிதமான, பாதுகாப்பான பயணத்துக்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எனவே விமானப் பயணிகள் கலக்கமடையாமல் அமைதி காக்க வேண்டும். விமான நிலைய பணியாளர்கள் பயணிகளிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்’ என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார் மத்திய அமைச்சர்.
சென்னை, பெங்களூரு, மும்பை, கொல்கத்தா, தில்லி போன்ற விமான நிலையங்களில் சர்வர் பாதிப்பால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டது மட்டுமல்லாமல் இந்த விமானங்களின் செயல்பாடுகளும் முடங்கியுள்ளதாக விமானப் போக்குவரத்து அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் விமான சேவை முடங்கியதால் திட்டமிட்டபடி பயணத்தைத் தொடங்க முடியாமல் பயணிகள் சிரமத்துக்கு உள்ளானார்கள்.