
வழக்கமான அட்டவணையைவிட கிட்டத்தட்ட ஒரு வாரம் முன்கூட்டியே கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. மேலும், கடந்த 16 ஆண்டுகளில் முதல்முறையாக முன்கூட்டியே பருவமழை தொடங்கியது.
காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் முன்னேறி வரும் தென்மேற்கு பருவமழை அமைப்பு ஆகியவற்றால், கடந்த இரண்டு நாள்களாக கேரளத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன்மூலம், பருவமழை தொடங்குவதற்கான அனைத்து சாதகமான சூழ்நிலைகளும் உருவாகிய நிலையில், இன்று (மே 24) பருவமழை தொடங்கியது.
கடைசியாக கடந்த 2001 மற்றும் 2009 ஆகிய ஆண்டுகளில், பருவமழை முன்கூட்டியே மாநிலத்தை வந்தடைந்தது. அந்த ஆண்டுகளில் மே 23-ல் பருவமழை தொடங்கியது.
கேரளத்தில் தென்மேற்கு பருவமழை வழக்கமாக ஜூன் 1-ல் தொடங்கும். பருவமழை குறித்து முதன்முதலில் 1918-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆவணங்களின்படி அந்த வருடம் மே 11-ல் பருவமழை தொடங்கியுள்ளது. மேலும், தாமதமான பருவமழை குறித்து 1972-ல் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த ஆண்டில் ஜூன் 18-ல் பருவமழை தொடங்கியுள்ளது.
கடந்த 25 ஆண்டுகளில், 2016-ல் தான் மிகவும் தாமதமாக ஜூன் 9-ல் தென்மேற்கு பருவமழை கேரளத்தில் நுழைந்தது.
தெற்கு மாநிலங்கள்
தென் மாநிலங்களைப் பொறுத்தளவில் கேரளம், கடலோர மற்றும் தெற்கு உட்புற கர்நாடகம், கொங்கன் கடற்கரைப் பகுதி மற்றும் கோவாவில் இன்று (மே 24) மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
மே 29 வரை மணிக்கு 40-50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன், கேரளம் மற்றும் கடலோர கர்நாடகத்தில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், தமிழ்நாடு, தெலங்கானா மற்றும் ஆந்திரத்தில் அடுத்த ஐந்து நாள்களுக்கு ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.