
உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா கடந்த ஜனவரி 13-ல் தொடங்கி பிப்ரவரி 26 வரை நடைபெறவுள்ளது. இதுவரை திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய பக்தர்களின் எண்ணிக்கை 10 கோடியைத் தாண்டியுள்ளது.
இந்நிலையில், மகா கும்பமேளாவில் ருத்ராட்ச மாலைகளை விற்று வரும் பெண் ஒருவர் தன் பேரழகால், மயக்க வைக்கும் கண்களால் இந்தியா முழுக்கப் புகழ் பெற்றிருக்கிறார். யூடியூப் சேனலில் முதலில் இவருடைய பேட்டி வெளியானது. அன்று முதல் எங்குப் பார்த்தாலும் இவருடைய ரீல்ஸ், ஷார்ட்ஸ் தான்.
அவருடைய அழகான தோற்றத்தை வைத்து மோனாலிசா போஸ்லே என்று இவருக்கு ரசிகர்கள் பெயர் சூட்டியுள்ளார்கள். ஆனால் ரசிகர்களின் அன்பு பெரிய தொல்லையாக தற்போது மாறியுள்ளது. எந்நேரமும் ரசிகர்கள் இவருடன் இணைந்து புகைப்படங்கள் எடுத்துக்கொள்ள விருப்பப்படுவதால் பலவிதமான சிரமங்களுக்கும் ஆளாகியுள்ளார்.
இதுகுறித்து ஒரு பேட்டியில் மோனாலிசா கூறுகையில், `எங்கள் கூடாரத்துக்குள் நுழைந்த இளைஞர்கள், என்னுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள விரும்பினார்கள். புகைப்படம் எடுத்துக்கொள்ள என் தந்தை அனுமதி அளித்ததாகவும் கூறினார்கள். நான் மறுத்தேன். பிறகு அவர்கள் மொபைலில் எடுத்த என்னுடைய புகைப்படங்களை என் சகோதரர் நீக்க முயன்றார். இந்த மோதலில் 9 இளைஞர்கள் என் சகோதரை அடித்துவிட்டார்கள். நான் பயந்துபோனேன். அங்கு மின்சாரமும் இல்லை. எனக்கு எது வேண்டுமானாலும் நடக்கலாம்’ என்று பயந்தபடி பேட்டியளித்துள்ளார்.
தினமும் ஊடகங்களும் ரசிகர்களும் அளிக்கும் தொல்லைகளில் இருந்து தப்பிக்க மகா கும்பமேளாவை விட்டு தன்னுடைய சொந்த ஊரான இந்தூருக்கே மோனாலிசா சென்றுவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.