
மத்திய பட்ஜெட் இளைஞர்கள், ஏழைகள் உட்பட அனைவருக்குமானது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
2024-25 ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார்.
இந்நிலையில் மத்திய பட்ஜெட் அறிவிப்பால் பல கோடி பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
அவர் பேசியதாவது:
“மத்திய பட்ஜெட் இளைஞர்கள், ஏழைகள் உட்பட அனைவருக்குமானது. இந்த அறிவிப்பால் பல கோடி பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
அனைத்து சமூகத்தைச் சேர்ந்தவர்களின் வளர்ச்சிக்கும், அவர்கள் அதிகாரம் பெறுவதற்கும் உதவும்.
கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி நபர்கள் வறுமையில் இருந்து அகற்றப்பட்டுள்ளனர்.
அனைத்து துறைகளிலும் பெண்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையிலும், சிறு தொழிலாளர்களுக்கு உதவும் வகையிலும் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
புதிதாக பணியில் சேரும் அனைத்து ஊழியர்களுக்கும் ஒரு மாத ஊதியம் (ரூ. 1 லட்சம் வரை) ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.
கிராமங்களில் இருந்து வரக்கூடிய இளைஞர்களுக்கு முன்னணி நிறுவனங்களில் தொழில்பயிற்சி அளிக்கப்படும்” என்றார்.