
பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலரும், பத்ம ஸ்ரீ விருது பெற்றவருமான துளசி கவுடாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.
கடந்த 1944-ல் பிறந்த துளசி கவுடா, ஹலக்கி பழங்குடியினத்தைச் சேர்ந்தவர். தன்னுடைய 12 வயதில் இருந்து காடுகளுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்ட துளசி கவுடா, கடந்த 60 வருடங்களில் மட்டும் சுமார் 30,000-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு சாதனை படைத்துள்ளார்.
பல்வேறு மரங்கள், செடிகள், கொடிகள் குறித்த இவரது விரிவான அறிவு காரணமாக காடுகளின் தகவல் களஞ்சியம் எனவும், மரங்களின் அன்னை எனவும் அழைக்கப்பட்டார். சுற்றுச்சூழல் பாதுகாப்பில் துளசி கவுடா மேற்கொண்ட பணிகளை அங்கீகரிக்கும் விதமாக கடந்த 2020-ல் அவருக்குப் பத்ம ஸ்ரீ விருதை அறிவித்தது மத்திய அரசு.
குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த விழாவில் வெறும் கால்களில் நடந்து வந்து விருது பெற்று பலரது கவனத்தையும் ஈர்த்தார் துளசி கவுடா. இதனைத் தொடர்ந்து, கடந்த 2023-ல் தார்வாட் அரசு வேளாண் பல்கலைக்கழகம் துளசி கவுடாவுக்கு கௌரவ முனைவர் பட்டம் வழங்கி சிறப்பித்தது.
இந்நிலையில் வயது மூப்பால் ஏற்பட்ட உடல் நலக்குறைவால் நேற்று மாலை, கர்நாடக மாநிலம் தாவங்கரே மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த கிராமமான ஹோனள்ளியில் உயிரிழந்தார் துளசி கவுடா. அவரது இறப்புக்குப் பிரதமர் மோடி வெளியிட்ட இரங்கல் குறிப்பு பின்வருமாறு,
`கர்நாடகாவின் சுற்றுச்சூழல் ஆர்வலரும், பத்ம விருது பெற்றவருமான துளசி கவுடாவின் மறைவு வருத்தமளிக்கிறது. இயற்கையைப் பாதுகாக்கவும், ஆயிரக்கணக்கான மரக்கன்றுகளை நட்டு வளர்ப்பதற்கும், நம் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கும் அவர் தன் வாழ்நாளை அர்ப்பணித்தார்.
சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான வழிகாட்டியாக அவர் என்றும் இருப்பார். பூமியைப் பாதுகாப்பதில் அவரது பணிகள் பல தலைமுறைகளுக்கு ஊக்கத்தை வழங்கும். அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் எனது இரங்கல்கள்’ என்றார்.