
இந்தியாவும் அமெரிக்காவும் நேர்மறையான முன்னோக்கிய உலகளாவிய உறவைக் கொண்டுள்ளது என்றும் டிரம்ப்பின் உணர்வுகளை வழிமொழிகிறேன் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அண்மைக் காலமாக இந்தியாவுக்கு அமெரிக்காவும் இடையிலான உறவில் சிறிய விரிசல் விட்டிருப்பதாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கியதற்கு எதிர்வினையாக, அமெரிக்கா அனைத்து இறக்குமதி பொருட்களுக்கும் 25% கூடுதல் வரி விதித்ததில் இருந்து சர்ச்சை கிளம்பியது.
மேலும், சீனாவில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டு, ரஷிய அதிபர் புதின், சீன அதிபர் ஜின்பிங் ஆகியோருடன் நட்போடு பழகி வந்தது அமெரிக்காவை எரிச்சலடையச் செய்தது. ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதற்காக இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் மீது அமெரிக்கா வரிவிதிப்பு நடவடிக்கையை மேற்கொண்ட நிலையில், சீனாவில் நடைபெற்ற இந்த சந்திப்பு சர்வதேச அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதன் எதிரொலியாக நேற்று (செப். 5) சீனாவின் ஆதிக்கத்தால் இந்தியாவையும் ரஷ்யாவையும் நாம் இழந்துவிட்டோம். அவர்களது வளமையான எதிர்காலத்திற்கு வாழ்த்துகள் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை வெளியிட்டார். இது அமெரிக்காவின் அதிருப்தியைக் காட்டுவதாக சர்வதேச அரசியல் விமர்சகர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், இந்தியா உடனான அமெரிக்காவின் உறவு சிறப்பானது என்று அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடிக் கருத்து ஒன்றை அண்மையில் கூறினார். வெள்ளை மாளிகையில் அவர் பேசியபோது : “ நான் எப்போதும் மோடியுடன் நட்பாக இருப்பேன். அவர் சிறந்த பிரதமர். இந்தியாவும் அமெரிக்காவும் சிறப்பான உறவைப் பேணி வருகிறது. அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. இந்தியாவை இழந்து விடுவோமோ என்ற பயம் நமக்கு இல்லை. நான் மோடியுடன் நிறைய விஷயங்களில் ஒத்துப்போகிறேன்” என்று கூறியிருக்கிறார்.
இதையடுத்து, டிரம்பின் கருத்தை வரவேற்பதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். இதுகுறித்த அவரது எக்ஸ் தள பதிவில், “அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் உணர்ச்சிகளை நான் மிகவும் பாராட்டுகிறேன். நானும் அதையே வழிமொழிகிறேன். இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவு நேர்மறையானதும், முன்னோக்கியதும், உலகளாவிய உத்திகளை உள்ளடக்கியதும் ஆகும்” என்று தெரிவித்திருக்கிறார்.
Donald Trump | Modi | India | USA | India - US Relations |