தொலை தொடர்பு சேவைக்கான உரிமைக் கட்டணத்தை குறைக்க மத்திய அரசுக்கு தனியார் தொலை தொடர்பு நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளதால், மொபைல் ரீசார்ஜ் கட்டணங்கள் குறையும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
தொலை தொடர்பு சேவைக்கான உரிமைக் கட்டணத்தை தனியார் தொலை தொடர்பு நிறுவனங்கள் மத்திய அரசுக்கு செலுத்தி வருகின்றன. தங்களது மொத்த வருமானத்தில் சுமார் 8 சதவீதத்தை உரிமைக் கட்டணமாக தற்போது தனியார் தொலை தொடர்பு நிறுவனங்கள் அரசுக்கு செலுத்தி வருகின்றன.
இந்த உரிமைக் கட்டணத்தை 0.5 முதல் 1 சதவீதமாக குறைக்குமாறு இந்திய செல்லுலார் ஆபரேட்டர்கள் சங்கம் மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது. இந்திய செல்லுலார் ஆபரேட்டர்கள் சங்கத்தில் தனியார் தொலை தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல், வி.ஐ., ஜியோ ஆகியவை பங்கு வகிக்கின்றன.
ஒரு வேளை தனியார் தொலை தொடர்பு நிறுவனங்களின் இந்தக் கோரிக்கையை மத்திய அரசு ஏற்று, சேவைக்கான உரிமைக் கட்டணத்தைக் குறைக்கும் பட்சத்தில் ஏர்டெல், வி.ஐ., ஜியோ உள்ளிட்ட நிறுவனங்கள் தங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை குறைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
தங்கள் சேவையை விரிவாக்கும் நோக்கிலும், 5 ஜி சேவைக்கான முதலீடுகளைப் பெரும் நோக்கிலும் தனியார் தொலை தொடர்பு நிறுவனங்கள் கடந்த ஜூலையில், தங்களது ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தின. இதனால் இந்நிறுவனங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் பொதுத்துறை தொலை தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல். சேவைக்கு மாறினர்.
வாடிக்கையாளர்களை மீண்டும் தங்கள் பக்கம் திருப்பும் வகையில் தனியார் தொலை தொடர்பு நிறுவனங்கள் மத்திய அரசின் உதவியை இவ்வாறு நாடியுள்ளன.