ஜார்க்கண்ட மாநில பணியாளர் தேர்வு ஆணையம் நடத்திய போட்டித் தேர்வுக்காக அம்மாநிலம் முழுவதும் இன்று (செப்.21) இணைய சேவை தற்காலிகமாக துண்டிக்கப்பட்டது.
இன்று காலை 8 மணி தொடங்கி பிற்பகல் 1.30 மணி வரை, ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை போட்டித் தேர்வை மாநிலம் முழுவதும் நடத்தியது ஜார்க்கண்ட மாநில பணியாளர் தேர்வு ஆணையம். இந்தத் தேர்வில் முறைகேடுகளைத் தடுக்கும் வகையில் தேர்வு நேரத்தின்போது மட்டும் மாநிலம் முழுவதும் இணைய சேவை துண்டிக்கப்பட்டது.
823 தேர்வு மையங்களில், 6.40 லட்சம் தேர்வர்கள் கலந்துகொள்ளும் இந்தத் தேர்வை நியாயமான முறையில் வெளிப்படைத்தன்மையுடன் நடத்தும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக முன்பு ஜார்க்கண்ட் அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக ஜார்க்கண்ட் அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், `ஃபேஸ் புக், எக்ஸ், டெலிகிராம், யூடியூப், வாட்ஸ் ஆப் உள்ளிட்ட பல்வேறு மொபைல் செயலிகளை உபயோகித்து முந்தைய காலகட்டங்களில் முறைகேடுகள் நடந்துள்ளன. பொதுமக்களுக்கு சந்தேகம் ஏற்படும் வகையில் தேர்வு நடைமுறையில் உள்ள ஒட்டைகளைக் களைய ஜார்க்கண்ட் அரசு முடிவு செய்துள்ளது.
இதன் அடிப்படையில் நியாயமான முறையில் வெளிப்படைத்தன்மையுடன் தேர்வை நடத்தும் வகையில் தேர்வு நடைபெறும் நேரத்தில் மட்டும் தற்காலிகமாக இணைய சேவையைத் துண்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.