

மகாராஷ்டிராவில் 20 ஆண்டு கால பகையை முடித்துக்கொண்டு சிவசேனா சகோதரர்கள் இணைந்து உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலத்தில் மும்பை உள்ளிட்ட 29 மாநகராட்சிகளின் 2,869 வார்டுகளுக்கு, 2026 ஜனவரி 15-ல், ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதில் அம்மாநிலத்தின் முக்கிய கட்சியாக விளங்கும் உத்தவ் பாலாசாஹேப் தாக்கரே தரப்பு சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரேவும், மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரேவும் ஒன்றாக இணைந்து தேர்தலைச் சந்திக்கப்போவதாக அறிவித்துள்ளனர்.
பிரிந்த சகோதரர்கள்
சிவசேனா கட்சியின் நிறுவனர் பால் தாக்கரேவின் சகோதரர் ஸ்ரீகாந்த் தாக்கரே. சிவசேனா கட்சியின் ஆரம்பகாலத்தில் பால் தாக்கரேவின் மகன் உத்தவ் தாக்கரேவும், ஸ்ரீகாந்த் தாக்கரேவின் ராஜ் தாக்கரேவும் ஒன்றாகப் பணியாற்றினர். ஆனால் காலப்போக்கில் இருவருக்கும் இடையில் மோதல் போக்கு ஏற்பட்டது. குறிப்பாக, உத்தவ் தாக்கரேவுக்கே அதிக முக்கியத்துவம் தரப்படுவதாக கருதிய ராஜ் தாக்கரே, 2006-ல் மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா என்ற தனிக் கட்சியை தொடங்கினார். அன்று முதல் இரு சகோதர்களுக்கு இடையே பகை நிலவி வந்தது.
20 ஆண்டுகளுக்கு பின் இணைப்பு
இதற்கிடையில், மகாராஷ்டிர அரசியலில் இவ்விரு கட்சிகளும் சமீப காலமாக தேர்தலில் படு தோல்விகளைச் சந்தித்து வருகின்றன. இதனால் காங்கிரஸ் மற்றும் சரத் பவார் தலைமையிலான கூட்டணியில் இருந்து விலகிய உத்தவ் தாக்கரே, தற்போது ராஜ் தாக்கரேவுடன் இணைந்துள்ளார். இது தொடர்பாக இன்று ராஜ் தாக்கரேவைச் சந்தித்த உத்தவ் தாக்கரே, வரும் உள்ளாட்சித் தேர்தலில் இரு கட்சிகளும் இணைந்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தார்.
“பாஜகவைச் சகிக்க முடியாதவர்கள் இணையலாம்”
மும்பையில் செய்தியாளர்களை கூட்டாகச் சந்தித்த உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே ஆகியோர் இதற்கான அறிவிப்பை வெளியிட்டனர். இதுகுறித்து ராஜ் தாக்கரே பேசியதாவது:-
‘‘இன்று நாங்கள் எங்கள் இருவருக்கும் இடையேயான கூட்டணியை அறிவிக்கிறோம். தேர்தலை இணைந்து எதிர்கொள்வோம். மும்பை மேயர் ஒரு மராத்தியராக இருப்பார். அவர் எங்கள் கட்சிகள் இரண்டு கட்சிகளில் ஏதேனும் ஒன்றைச் சார்ந்தவராக இருப்பார். மேலும், நாங்கள் சரத் பவாருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்’’ என்றார்.
அவரைத் தொடர்ந்து உத்தவ் தாக்கரே கூறியதாவது:-
‘‘நாங்கள் ஒன்றாக இருப்பதற்காக இணைந்துள்ளோம். மும்பையை அபகரிக்க நினைப்பவர்களை நாங்கள் ஒழித்துக் கட்டுவோம். மராத்தி மக்களிடம் நான் சொல்ல விரும்புவது, நீங்கள் இப்போது பிரிந்து சென்றால், நீங்கள் தோற்கடிக்கப்படுவீர்கள். பாஜகவில் நடப்பதைப் பார்க்க சகிக்க முடியாதவர்களும் எங்களுடன் வரலாம்’’ என்றார். 20 ஆண்டுகளுக்குப் பிறகு தாக்கரே சகோதரர்கள் இணைந்திருப்பது மகாராஷ்டிர அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது.
Raj Thackeray, in the presence of his cousin Uddhav Thackeray, announced the long-awaited alliance between their parties —Shiv Sena (UBT) and Maharashtra Navnirman Sena (MNS) for the January 15 civic elections in Mumbai on Wednesday.