
உத்தர பிரதேச சட்டப்பேரவைக்குள் பான்மசாலாவைக் குதப்பித் துப்பிய எம்.எல்.ஏ.வுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார் சபாநாயகர் சதீஷ் மஹானா.
உத்தர பிரதேச சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. கடந்த பிப்.20-ல் அம்மாநில நிதியமைச்சர் சுரேஷ் குமார் கன்னா 2025-26 நிதியாண்டிற்கான பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இந்நிலையில், வழக்கம்போல இன்று (மார்ச் 4) காலை சட்டப்பேரவை கூடியது.
அப்போது சட்டப்பேரவை சபாநாயகர் சதீஷ் மஹானா கூறியதாவது,
`நமது சட்டப்பேரவை வளாகத்திற்கு பான்மசாலாவைக் குதப்பிவிட்டு ஒரு எம்.எல்.ஏ. துப்பியது குறித்து இன்று காலை எனக்கு தகவல் கிடைக்கப் பெற்றது. அதனால், நானே வந்து அதை சுத்தம் செய்தேன். அந்த செயலைச் செய்த எம்.எல்.ஏ.வை காணொளியில் பார்த்தேன்.
ஆனால் யாரையும் நான் அவமானப்படுத்த விரும்பவில்லை. எனவே, அவரது பெயரைப் பொதுவெளியில் உச்சரிக்கப்போவதில்லை. யாராவது இவ்வாறு செய்வதை பார்த்தால் அவர்களை தடுத்து நிறுத்தவேண்டும் என அனைத்து எம்.எல்.ஏ.க்களிடமும் நான் வலியுறுத்துகிறேன். சட்டப்பேரவை வளாகத்தை சுத்தமாக வைத்திருப்பது நமது கடமையாகும்.
தாமாக முன்வந்து இது குறித்து அந்த எம்.எல்.ஏ. என்னிடம் பேசிவிட்டால் நல்லது, இல்லையென்றால் நானே அவரை அழைத்துப் பேசுவேன்’ என்றார்.