
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் செலுத்தப்பட்ட பிஎஸ்எல்வி-சி61 ராக்கெட் திட்டம் தோல்வியில் முடிந்தது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்துள்ள சதீஷ் தவன் விண்வெளி மையத்திலிருந்து இஸ்ரோவின் பிஎஸ்எல்வி-சி61 ராக்கெட் இன்று காலை விண்ணில் ஏவப்பட்டது. விண்ணில் ஏவப்படும் 63-வது பிஎஸ்எல்வி ராக்கெட் இது.
இந்த ராக்கெட் மூலம் புவி கண்காணிப்பு செயற்கைகோள் ஈஓஎஸ்-09-ஐ விண்ணில் செலுத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. எப்படிப்பட்ட சூழலாக இருந்தாலும், புவியைக் கண்காணித்து உயர் ரக புகைப்படங்களை அனுப்பும் வகையில் செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டிருந்தது.
இந்திய நேரப்படி இன்று காலை 5.59 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. முதல் இரு நிலைகளை வெற்றிகரமாகக் கடந்த இத்திட்டம், மூன்றாவது நிலையில் தோல்வியடைந்தது. இஸ்ரோ இதை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இத்திட்டம் தோல்வியடைந்ததற்கான உண்மைக் காரணம் விரைவில் கண்டறியப்படும் எனத் தெரிகிறது. இஸ்ரோ தலைவரும் உண்மைக் காரணத்தைக் கண்டறிந்த பிறகு விளக்கம் கொடுக்கப்படும் என்றார்.
இதற்கு முன்பு கடைசியாக ஆகஸ்ட் 31, 2017-ல் பிஎஸ்எல்வி-சி39 திட்டம் தோல்வியில் முடிந்தது. பிஎஸ்எல்வி திட்டம் அறிமுகமானதிலிருந்து தோல்வியடைவது இது மூன்றாவது முறை. முதன்முதலாக 1993-ல் விண்ணில் ஏவப்பட்ட பிஎஸ்எல்வி-டி1 தோல்வியில் முடிந்தது.