
இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் முன்னாள் இயக்குநர் ஜெனரலும், 2022-ல் பத்மஸ்ரீ விருதை வென்றவருமான விஞ்ஞானி சுப்பண்ணா ஐயப்பனின் உடல் காவிரி ஆற்றில் மீட்கப்பட்டுள்ளது.
70 வயதான சுப்பண்ணா ஐயப்பனின் உடல் மைசூரூவுக்கு அருகே உள்ள ஸ்ரீரங்கப்பட்டணாவில் காவிரி ஆற்றங்கரையோரத்தில் கண்டெடுக்கப்பட்டதாக ஸ்ரீரங்கப்பட்டணா காவல்துறையினர் தகவல் தெரித்தனர்.
ஐயப்பனை காணவில்லை என்று அவரது குடும்பத்தினர் கடந்த மே 7 அன்று மைசூரூவின் வித்யாரண்யபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். கைப்பேசியை எடுத்துச் செல்லாமல் தனது ஸ்கூட்டரில் வீட்டைவிட்டு வெளியேறிய ஐயப்பன், வீடு திரும்பவில்லை என்று புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
புகாரை முன்வைத்து விசாரித்தபோது, சாய் ஆசிரமத்திற்கு அருகே அவரது ஸ்கூட்டர் நிறுத்தப்பட்டிருந்தது தெரியவந்ததாக ஸ்ரீரங்கப்பட்டணா ஆய்வாளர் பி. பிரகாஷ் தெரிவித்தார். மேலும், `அவரது இறப்புக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. வழக்கமாக அவர் தியானம் செய்யும் சாய்பாபா ஆசிரமத்திற்கு அருகே மூன்று நாட்களுக்கு முன்பு தண்ணீருக்குள் இறங்கியிருக்கலாம்’ என்றார்.
காவிரி ஆற்றங்கரைக்கும், மைசூரூவில் உள்ள ராமகிருஷ்ணா ஆசிரமத்திற்கும் தியானம் மேற்கொள்ள அவர் அடிக்கடி சென்று வந்ததாக அவரது குடும்பத்தினர் தகவல் தெரிவித்தனர்.
காவிரி ஆற்றங்கரையில் மீட்கப்பட்ட சுப்பண்ணா ஐயப்பனின் உடல், மைசூரூவில் உள்ள கே.ஆர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. உடற்கூராய்விற்குப் பிறகு, குடும்பத்தினரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இயற்கைக்குப் மாறான மரணம் என்று காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் தலைமைப் பொறுப்பை வகித்த சுப்பண்ணா, நாட்டின் மீன்வளத்தைப் பெருக்குவதற்கான `நீலப் புரட்சி’ திட்டத்தில் முக்கியப் பங்கு வகித்துள்ளார். மீன்வளர்ப்பு மற்றும் மீன்வளத்தை நவீனமயமாக்கும் பல முன்னோடித் திட்டங்களில் அவர் பங்களித்துள்ளார்.