
பயங்கரவாதத்திற்கு எதிரான இந்திய ராணுவத்தின் நடவடிக்கைகளை தீவிரப்படுத்த, அவசரகால கொள்முதல் வழிமுறையின் கீழ் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் சுமார் 13 ஒப்பந்தங்களை இறுதி செய்துள்ளதாக அறிக்கை வெளியாகியுள்ளது.
இந்திய ராணுவத்திற்காக ஒட்டுமொத்தமாக ரூ. 2,000 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், ரூ. 1,981.90 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவசரகால கொள்முதல் வழிமுறையின் கீழ் விரைவான நடைமுறைகள் மூலம் செயல்படுத்தப்படும் இந்த கொள்முதல், பயங்கரவாதிகளுக்கு எதிரான சூழல்களில் பணியமர்த்தப்பட்ட துருப்புக்களின் இயக்கம் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், விரைவான வகையில் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் கையகப்படுத்துதல் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குண்டு துளைக்காத ஜாக்கெட்டுகள், பல்வேறு வகையான டிரோன்கள், தொலைவில் இருந்து இயக்கப்படும் வானூர்திகள், வீரர்களுக்கான தலைக்கவசங்கள், இலகுரக ரேடார்கள், மிகக் குறுகிய தூர வான் பாதுகாப்பு அமைப்புகள் – ஏவுகணைகள், கனரக மற்றும் நடுத்தர அளவிலான ராணுவ வாகனங்கள் போன்றவை கொள்முதல் செய்யப்படவுள்ளன.
வளர்ந்து வரும் பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ள இந்திய இராணுவத்தை நவீனப்படுத்துவதும் நடவடிக்கையை, முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட உபகரணங்களின் உதவியுடன் மேற்கொள்ளும் வகையில், இந்த கொள்முதல் ஒப்பந்தங்களை இறுதி செய்துள்ளதாக மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செயல்பாட்டுகளுக்கான உபகரணங்களை சரியான நேரத்தில் வாங்குவதை உறுதி செய்வதில், அவசரகால கொள்முதல் வழிமுறை முக்கியப் பங்காற்றுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.