தேர்தலில் போட்டியிடுவதற்கான வயதை 21 ஆகக் குறைக்க வேண்டும்: ராகவ் சத்தா

அரசியல் என்பது தப்பான தொழிலாகக் கருதப்படுகிறது. இளைஞர்கள் அரசியலுக்கு நுழைவதை ஊக்குவிக்கும் வகையில் நாம் செயல்பட வேண்டும்
தேர்தலில் போட்டியிடுவதற்கான வயதை 21 ஆகக் குறைக்க வேண்டும்: ராகவ் சத்தா
Print
1 min read

`அரசியலில் இளைஞர்கள் நுழைவதை ஊக்கப்படுத்தும் வகையில், மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் போட்டியிடுவதற்கான குறைந்தபட்ச வயதை 25-ல் இருந்து 21 ஆகக் குறைக்க வேண்டும்’ என்று மாநிலங்களவையில் பேசியுள்ளார் ஆம் ஆத்மி கட்சி எம்.பி. ராகவ் சத்தா.

`நாம் வயதான அரசியல்வாதிகளைக் கொண்ட ஒரு இளமையான நாடு. இளமையான அரசியல்வாதிகளைக் கொண்ட ஒரு இளமையான நாடாக மாற நாம் முன்வர வேண்டும்’ என்று தன் உரையில் குறிப்பிட்டார் சத்தா.

`மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் போட்டியிடுவதற்கான குறைந்தபட்ச வயது 25. அரசியலுக்குள் நுழைய விரும்பும் இளைஞர்களை நாம் ஊக்குவிக்கும் வகையில் இந்த வயது வரம்பை 21 ஆகக் குறைக்க வேண்டும் என்று இந்திய அரசுக்கு மாநிலங்களவை வழியாக நான் கோரிக்கை விடுக்கிறேன். 18 வயதில் ஓர் இளைஞன் தன் வாக்கைச் செலுத்தும்போது, 21 வயதில் ஏன் தேர்தலில் போட்டியிடக்கூடாது?’ என்று பேசினார் சத்தா

அரசியலில் இளைஞர்கள் குறைவாக இருப்பதற்கான காரணத்தைக் குறிப்பிட்ட சத்தா, `அரசியல் என்பது தப்பான தொழிலாகக் கருதப்படுகிறது. இளைஞர்கள் அரசியலுக்கு நுழைவதை ஊக்குவிக்கும் வகையில் நாம் செயல்பட வேண்டும்’ என்றார்.

`இந்தியா உலகில் இருக்கும் இளமையான நாடுகளில் ஒன்று. இந்தியர்களின் சராசரி வயது 29. இந்தியாவின் 65 சதவீத மக்களின் வயது 35-க்குள் உள்ளது. 50 சதவீதத்துக்கும் அதிகமான இந்தியர்கள் 50 வயதுக்கும் குறைவானவர்களாக உள்ளனர். முதல் மக்களவைத் தேர்தலில் 26 சதவீத எம்.பி.க்கள் 40 வயதுக்கும் குறைவான வயதுடையவர்களாக இருந்தனர்.

ஆனால் தற்போதைய 17-வது மக்களவையில் வெறும் 12 சதவீத எம்.பி.க்கள் மட்டுமே 40 வயதுக்கும் குறைவான வயதுடையவர்களாக இருக்கின்றனர். நாடு இளமையாகிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் நம் உறுப்பினர்களுக்கு வயதாகிக் கொண்டிருக்கிறது’ என்றார் ராகவ் சத்தா.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் போட்டியிடும் குறைந்தபட்ச வயது 25 ஆகும். மேலும் மாநிலங்களவை மற்றும் மாநில சட்டமேலவைகளில் போட்டியிட குறைந்தபட்ச வயது 30 ஆக உள்ளது. அதே நேரம் உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல்களில் போட்டியிட குறைந்தபட்ச வயது 21 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in