
14 ஆண்டுகளுக்கு முன்பு ஆதார் திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து இதுவரை 1.15 கோடி ஆதார் எண்களை மட்டுமே இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) நீக்கியுள்ள தகவல், தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இந்தியா டுடே தாக்கல் செய்த மனுவின் மூலம் தெரியவந்துள்ளது.
நாட்டின் 14 ஆண்டு கால இறப்பு விகிதத்தை ஒப்பிடும்போது இந்த 1.15 கோடி எண்ணிக்கை பெருமளவு குறைவு என்று இந்தியா டுடே வெளியிட்ட செய்தியில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 2025 நிலவரப்படி, இந்தியாவில் 142.39 கோடி பேரிடம் ஆதார் எண் உள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள்தொகை நிதியம் வெளியிட்ட தரவுகளின்படி, ஏப்ரல் 2025-ல் இந்தியாவின் மொத்த மக்கள்தொகை 146.39 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
அந்த வகையில், 2007 மற்றும் 2019-க்கு இடைப்பட்ட காலகட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 83.5 லட்சம் இறப்புகளை நாடு பதிவு செய்ததாக குடிமைப் பதிவு அமைப்பின் (CRS) அதிகாரப்பூர்வ தரவுகள் காண்பிக்கின்றன. இதன்படி பார்க்கும்போது, ஒட்டுமொத்த இறப்பு எண்ணிக்கையில் 10 சதவீதத்திற்கும் குறைவான ஆதார் எண்கள் மட்டுமே நீக்கப்பட்டுள்ளன.
ஆதார் எண்களை நீக்கும் செயல்முறை மிகவும் சிக்கலானது என்றும், மாநில அரசுகளால் வழங்கப்படும் இறப்புச் சான்றிதழ்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து கிடைக்கப்பெறும் தகவல்கள் போன்றவற்றையே இந்த நடைமுறை பெரும்பாலும் சார்ந்துள்ளது என்றும் அதிகாரிகள் கூறியதாக இந்தியா டுடே செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இறப்புப் பதிவேடுகளுக்கும், ஆதார் தரவுத் தளத்திற்கும் இடையிலான ஒருங்கிணைப்புக்கான அவசரத் தேவையை இந்த பொருத்தமின்மை எடுத்துக்காட்டுகிறது என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.