காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மிலிந்த் தியோரா கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
கட்சியின் முதன்மை உறுப்பினர் பொறுப்பை ராஜிநாமா செய்வதாக எக்ஸ் தளத்தில் மிலிந்த் தியோரா அறிவித்துள்ளார்.
மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் முரளி தியோராவின் மகன் மிலிந்த் தியோரா. காங்கிரஸிலிருந்து விலகியதன் மூலம் கட்சியுடனான 55 ஆண்டுகால குடும்ப உறவை இவர் முடிவுக்குக் கொண்டுவந்துள்ளார். இவர் 2012 முதல் 2014 வரை மத்திய இணை அமைச்சராக இருந்துள்ளார். மும்பை காங்கிரஸின் தலைவராகவும் இருந்துள்ளார்.
ராகுல் காந்திக்கு நெருங்கியவராக அறியப்படும் மிலிந்த் தியோரா, ராகுல் காந்தி மணிப்பூரில் நடைபயணத்தைத் தொடங்கவிருக்கும் அதேநாளில் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனையில் இணையப்போவதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ராஜிநாமா செய்த பிறகு மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய மிலிந்த் தியோரா வளர்ச்சிக்கான பாதையில் செல்வதாகக் கூறினார்.
தியோராவின் ராஜிநாமா குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், "இதைப் பிரதமர்தான் முடிவு செய்திருக்கிறார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை" என்றார்.