
பயங்கரவாதம் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்க வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொண்ட அனைத்துக் கட்சிக் குழுவில் இடம்பெற்றிருந்த திரிணாமுல் காங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான அபிஷேக் பானர்ஜி, இந்த பயணங்களின் முக்கியத்துவம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
வெளிநாட்டுப் பயணங்களை முடித்துக்கொண்டு திரும்பி வந்த அனைத்துக் கட்சிக் குழுக்களை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து ஒரு வாரம்கூட கடந்திடாத நிலையில், `பஹல்காம் தாக்குதல் நடைபெற்ற பின் கடந்த ஒரு மாதத்தில் 33 நாடுகளை அணுகிய பிறகு, அதில் எத்தனை நாடுகள் இந்தியாவிற்கான வெளிப்படையான ஆதரவை வழங்கின?’ என்று அபிஷேக் பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.
தான் பங்கு வகித்த அனைத்துக் கட்சிக் குழு பயணம் மேற்கொண்ட ஐந்து ஆசிய நாடுகளைச் சேர்ந்த சிவில் சமூக உறுப்பினர்கள் மற்றும் குடிமக்கள் ஆகியோரிடமிருந்து வரப்பெற்ற கருத்துகளும் கேள்விகளும் தன் கவலைகளைப் பிரதிபலிப்பதாக அபிஷேக் பானர்ஜி கூறியுள்ளார்.
26 பேர் பஹல்காமில் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக மத்திய அரசிடம் வெளிப்படைத்தன்மை இல்லாதது குறித்து தன் எக்ஸ் தள பதிவில் அவர் எழுப்பிய கேள்விகள்,
`எவ்வாறு நான்கு பயங்கரவாதிகள் எல்லைக்குள் ஊடுருவி 26 அப்பாவி பொதுமக்களைக் கொன்ற தாக்குதலை நடத்தினர்? இந்த மிகப்பெரிய பாதுகாப்பு மீறலுக்கு எதனால் இன்னும் யாரும் பொறுப்பேற்கவில்லை?
இது உளவுத்துறையின் தோல்வி என்றால், தாக்குதல் நடந்த ஒரு மாதத்திற்குள், உளவுத்துறைத் தலைவருக்கு ஏன் ஒரு வருட கால பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது? தாக்குதலுக்குப் பொறுப்பேற்காமல் எதனால் அவருக்கு வெகுமதி அளிக்கப்பட்டது? அதற்கான நிர்ப்பந்தம் என்ன?
இந்த கொடூரமான, மத அடிப்படையிலான படுகொலைக்குக் காரணமான நான்கு பயங்கரவாதிகள் எங்கே? அவர்கள் இறந்துவிட்டார்களா அல்லது உயிருடன் இருக்கிறார்களா? அவர்கள் கொல்லப்பட்டிருந்தால் அரசாங்கம் ஏன் தெளிவான அறிக்கையை வெளியிடத் தவறியது? அப்படி இல்லையென்றால், அரசாங்கம் ஏன் அமைதியாக இருக்கிறது?
ஐநா பயங்கரவாத எதிர்ப்புக் குழுவின் துணைத் தலைமையாக இவ்வாறு ஒரு மாதத்திற்குள்ளாக பாகிஸ்தான் நியமிக்கப்பட்டது? தேசத்திற்கு பதில்கள் தேவை’ என்றார்.