கொல்கத்தா பயிற்சி மருத்துவர் விவகாரம் தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள் மற்றும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் இடையிலான பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஆர்ஜி கர் மருத்துவமனையில் முதுநிலை பயிற்சி மருத்துவர் கடந்த 9 அன்று இறந்த நிலையில் கிடந்தார். பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட இந்தச் சம்பவம் நாடு முழுக்க பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்த வழக்கு தொடர்பாக கொல்கத்தா காவல் துறை ஒருவரைக் கைது செய்துள்ளது.
பாதிக்கப்பட்ட பயிற்சி மருத்துவரின் பெற்றோர் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கில், கொல்கத்தா காவல் துறை மீது திருப்தியின்மையை வெளிப்படுத்திய கொல்கத்தா உயர் நீதிமன்றம், வழக்கை சிபிஐ வசம் மாற்றி கடந்த 13-ல் உத்தரவிட்டது.
இந்த நிலையில், உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட், நீதிபதிகள் ஜெபி பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு ஆகஸ்ட் 20-ல் விசாரிக்கிறது.
மருத்துவர்கள் மற்றும் மருத்துவத் துறையைச் சேர்ந்தவர்கள் நாடு முழுக்கப் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் மற்றும் மருத்துவர்கள் இடையே இன்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை என அனைத்து இந்திய மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அனைத்து இந்திய மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
"மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் மற்றும் மருத்துவர்கள் இடையிலான இன்றைய பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இதன் விளைவாக எங்களுடையப் போராட்டம் தொடரும். இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் முடிவுக்காகக் காத்திருக்கிறோம்."