
மஹாராஷ்டிரத்தில் கடந்தாண்டு நவம்பரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தல் மேட்ச் ஃபிக்சிங் செய்யப்பட்ட தேர்தல் என விமர்சித்த ஆங்கில நாளிதழ் ஒன்றில் பிரத்யேகக் கட்டுரையை எழுதியுள்ளார் காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி.
இதைத் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள ராகுல் காந்தி, தனது கட்டுரையின் சுருக்கத்தைப் பதிவிட்டுள்ளார்.
"ஜனநாயகத்தை எப்படி சீர்குலைக்கலாம் என்பதற்குச் சிறந்த உதாரணம் 2024 மஹாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல்.
தேர்தல் ஆணையத்தை நியமிக்கும் குழுவைக் கையகப்படுத்துவது
வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்களைச் சேர்ப்பது
வாக்கு விகிதத்தை உயர்த்திக் காண்பிப்பது
பாஜக வெற்றி பெற வேண்டும் எனும் இடங்களைக் குறிவைத்து போலி வாக்குகளைச் செலுத்துவது
ஆதாரங்களை அழிப்பது
மஹாராஷ்டிரத்தில் எப்படியாக வெற்றி பெற்றாக வேண்டும் என பாஜக துடிப்பாக இருந்ததைப் புரிந்துகொள்வதில் எந்தக் கடினமும் இல்லை. தேர்தல் முறைகேடு என்பது மேட்ச் ஃபிக்சிங் போன்றது. ஏமாற்றும் கட்சி வெற்றியைப் பெறும். ஆனால், இது ஜனநாயக அமைப்புகளை வலுவிழக்கச் செய்யும். தேர்தல் முடிவுகள் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை அழித்தொழிக்கும். ஒவ்வொரு பொறுப்புள்ள குடிமகனும் ஆதாரங்களைக் கோர வேண்டும். உண்மையைப் புரிந்துகொள்ள வேண்டும். கேள்விகளை எழுப்ப வேண்டும். காரணம், மஹாராஷ்டிர தேர்தலில் நிகழ்ந்த மேட்ச் ஃபிக்சிங் பிஹாரிலும் தொடரும். அடுத்து, பாஜக தோற்கும் இடங்களிலும் தொடரும். மேட்ச் ஃபிக்சிங் செய்யப்பட்ட தேர்தல்கள் ஜனநாயகத்துக்கு நஞ்சு" என்று ராகுல் காந்தி எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு ராகுல் காந்தி இவ்வாறு பதிவிட்டுள்ளது நாடு முழுக்க பேசுபொருளானது.
ராகுல் காந்தியின் விமர்சனத்துக்குத் தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது.
"எல்லா வாக்குச் சாவடிகளிலும் வேட்பாளர்கள்/அரசியல் கட்சிகளால் நியமிக்கப்பட்ட வாக்குச் சாவடி முகவர்கள் முன்னிலையிலேயே வாக்குப்பதிவு நடைபெற்றது. காங்கிரஸ் நியமித்த வேட்பாளர்கள் அல்லது அவர்களுடைய அதிகாரபூர்வ முகவர்கள் யாரும் எந்தக் குற்றச்சாட்டையும் எழுப்பவில்லை.
மஹாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு காங்கிரஸ் அல்லது எந்தவோர் அரசியல் கட்சி சார்பிலும் குறைகள் தெரிவிக்கப்படவில்லை. மஹாராஷ்டிர வாக்காளர்கள் பட்டியலுக்கு எதிராக ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை முன்வைப்பது சட்டத்தை அவமதிப்பதாகும். இந்த உண்மைத் தகவல்கள் அனைத்தும் டிசம்பர் 24 அன்று காங்கிரஸ் கட்சிக்குப் பதிலாகக் கொடுக்கப்பட்டுள்ளது.
இவை தேர்தல் ஆணையத்தின் இணையதளப் பக்கத்திலும் உள்ளன. இந்த உண்மைத் தகவல்கள் அனைத்தும் முற்றிலுமாக நிராகரிக்கப்படுவதாகத் தெரிகிறது. பொய்த் தகவல்களை யார் பரப்பினாலும், அது சட்டத்தை அவமதிப்பதற்குச் சமம். வாக்காளர்களால் எதிர்பார்த்த முடிவு கிடைக்காதபோது, தேர்தல் ஆணையம் மீது அவதூறு பரப்புவது முற்றிலுமாக அபத்தமானது" என்று தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.