
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் கிஷ்த்வாரில் இன்று (ஆக. 14) ஏற்பட்ட மிகப்பெரிய மேக வெடிப்பு சம்பவத்தின் தொடர்ச்சியாக குறைந்தபட்சம் 33 பேர் உயிரிழந்துள்ளனர், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
மாதா சண்டி கோயிலுக்கு செல்வதற்கான மச்சைல் மாதா யாத்திரை பாதையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. மாவட்ட நிர்வாகம் உடனடியாக செயல்பட்டு மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததைத் தொடர்ந்து, மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
யாத்திரைக்காகப் பணியில் ஈடுபட்டிருந்த மத்திய தொழில் பாதுகாப்புப் படை (சி.ஐ.எஸ்.எஃப்.) வீரர் ஒருவர் இறந்தவர்களில் அடக்கம். அத்துடன் மேக வெடிப்பு சம்பவத்தால் ஏற்பட்ட பெரு வெள்ளம் மற்றும் நிலச்சரிவைத் தொடர்ந்து மூன்று சி.ஐ.எஸ்.எஃப். வீரர்களைக் காணவில்லை என்று கூறப்படுகிறது.
கிஷ்த்வாரில் உள்ள மாதா சண்டி கோயிலுக்கு செல்லும் மச்சைல் மாதா யாத்திரையின் தொடக்கப் புள்ளியாகச் செயல்படும் பகுதியில் இருந்து பக்தர்கள் வெளியேற்றப்படும் காணொளிகள் சமூக வலைதளங்களில் வெளியாகின. மற்றொரு காணொளியில் மேக வெடிப்பால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு இடம்பெற்றுள்ளது.
கோயிலுக்கு அருகில் உள்ள சோஸ்தியில் நடைபெற்ற இந்த சம்பவம் `கணிசமான உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடும்’ என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறினார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், `ஜம்மு காஷ்மீர் எதிர்க்கட்சித் தலைவர் சுனில் குமார் சர்மாவிடம் இருந்து அவசர செய்தி கிடைத்த பிறகு, கிஷ்த்வார் துணை ஆணையர் பங்கஜ் குமார் சர்மாவிடம் பேசினேன். சோஸ்தி பகுதியில் ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக கணிசமான உயிரிழப்புகள் ஏற்படக்கூடும். நிர்வாகம் உடனடியாக நடவடிக்கையில் இறங்கியுள்ளது, சேத மதிப்பீடு மற்றும் தேவையான மீட்பு பணி, மருத்துவ உதவுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன,’ என்றார்.
பாதிக்கப்பட்ட பகுதியில் மீட்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதை கிஷ்த்வார் துணை ஆணையர் பங்கஜ் சர்மா உறுதிப்படுத்தியதாக இந்திய டுடே வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.
மேக வெடிப்பு சம்பவத்தால் துயரமடைந்ததாகக் கூறிய ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக தெரிவித்தார்.